உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கிரேக்கக் கதைகள்

முன்னொரு காலத்தில் கிரேக்க நாட்டில் ஓர் அரசன் இருந்தான். அவனுக்கு மூன்று அழகிய பெண்கள் இருந்தனர். மூத்த பெண்கள் இருவரும் அவ்வூரில் இருந்த இரு செல்வர்களுக்கு மணம் செய்விக்கப்பட்டனர். ஆனால், எல்லாரிலும் மிக்க அழகு வாய்ந்திருந்த கடைசி மகளான சைக்கீ மணமாகாமலே, தன் தந்தையின் மாளிகையில் வாழ்ந்து வந்தாள். அவள் எல்லையற்ற எழில் படைத்திருந்தாள். முதல் தடவையாகக் கண்ட யாரும் அவளை ஒரு தெய்வமகள் என்றே நினைக்கும்படி அவள் இருந்தாள்.

ஒருநாள், கடல் தாண்டி வேற்றுநாடு சென்று திரும்பிய வீரன் ஒருவன் வீனஸ் தெய்வத்தின் கோயிலில் தொழுவதற்கு வந்தான். சைக்கீயும் அன்று அக்கோவிலுக்கு வந்திருந்தாள். முன் மண்டபத்தில் அவள் நிற்பதைக் கண்ட அவ்வீரன் அவள்தான் வீனஸ் தெய்வம் என்றும், தன் மீது அருள் சுரந்து நேரில் காட்சியளிக்கத் தோன்றிவிட்டாள் என்றும் கருதி அவள் காலடியில் வீழ்ந்து வணங்கினான்; அழகுத் தெய்வத்துக்கான துதிப்பாடல்களையும் பாடினான். அங்கு நடந்ததை அறிந்த வீனஸ் தெய்வத்துக்குப் பெருஞ்சினமேற்பட்டது. அன்று முதல் அவள் யாதொரு பிழையுமறியாத சைக்கீயை வெறுத்துப் பகைத்தாள். எனவே, அவள் தன் மகனான கியூப்பிட் என்னும் காதல் தெய்வத்திடம் நடந்த வரலாற்றைத் தெரிவித்து, அவனைப் பூவுலகுக்குச் சென்று, தன் தாயின் உள்ளத்தை வெம்பவைத்த அந்த அழகுப் பெண்ணைக் கொன்று வருமாறு ஏவினாள். காதல் தெய்வம் அப்படியே செய்து வருவதாக உறுதி கூறித் தன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு, பறந்து வந்து பூவுலகில் இறங்கினான். விரைந்து பறப்பதற்காக கியூப்பிட்டின் முதுகில் இரண்டு சிறகுகள் இருக்கும்.