உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

அப்பாத்துரையம் 40

-

அவன் சைக்கீ வாழ்ந்த நகரத்தை அடைந்தான். அந்த எழிலணங்கை எங்கும் தேடினான். அவள் இருக்கும் இடத்தை அவன் நட்டுச்சிப் பொழுதில் கண்டுபிடித்தான்.

சைக்கீ அரண்மனைத் தோட்டத்தில், குளிர்ந்ததொரு நிழலிடத்தில், பசும்புல் நிலத்தில் படுத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். ஒரு கையை மடக்கி, பளிங்குச் சுனையின் படிமீது வைத்துக்கொண்டு அவள் படுத்திருந்தாள். மற்றொரு கையில் அவள் புத்தகம் ஒன்றை வைத்திருந்தாள். அருகில் நின்றிருந்த பன்னீர்ப் பூமரம் தன் கிளைகளைத் தாழ்த்தி அவளுக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்ததுடன், நறுமணம் வீசும் மலர்களையும் அவள்மீது சொரிந்து கொண்டிருந்தது.

அவள் காலடியில் வந்திறங்கிய காதல் தெய்வத்தின் சிறகுகள் படபடத்தபோது சைக்கீயின் மெல்லிய கூந்தல் மயிர் சற்றே பறந்து சுருள் சுருளாகத் தரைமீது படிந்தது. தான் தேடிவந்த பொருளைக் கண்டதும் தன் கொலை நோக்கம் கைகூடப் போகிறது என்ற மகிழ்ச்சியுடன் அவன் கொடிய புன்னகை புரிந்து நின்றான். ஆனால், அது ஒரு நொடியில் மறைந்து, பெரு வியப்பால் அவன் வாய்திறந்து, விழிகொட்டாது அவளையே பார்த்துக்கொண்டு சிலைபோல் நின்றான். தெய்வங்களின் உறைவிடமான ஒலிம்பசு மலையிலேயே அவன் வாழ்ந்து வருபவனாயிருந்தும், அதுவரையில் அவ்வளவு அழகு வாய்ந்த ஓர் உருவத்தையும் அவன் கண்டதே இல்லை. சைக்கீயின் அழகில் ஈடுபட்ட கியூப்பிட், அவள் அருகே மண்டியிட்டுத் தாழ்ந்து, மெல்ல அவள் நெற்றியை வருடி, குனிந்து அவளை முத்தமிட்டான். இனி அவளைத் தன்னால் கொல்ல முடியாது என்பதையும் அவன் உணர்ந்தான்.

அன்று முழுவதும் கியூப்பிட் சைக்கீ செல்லும் இடத்துக் கெல்லாம் அவளைத் தொடர்ந்து சென்றான். அவளைப் பார்க்கப் பார்க்க அவள் முன்னிலும் அழகு மிகுந்து விளங்கியதாய் அவனுக்குத் தோன்றியது.

அன்றிரவு நிலவொளியில் அவன் கிரேக்க நாட்டிலிருந்து கடல் வெளியில் பறந்து சென்றபோதெல்லாம் அவன் உள்ளம் சைக்கீயையே நினைத்து உருகியது. உலக மக்களைக் காதலால்