உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

87

வருத்தும் தெய்வமாகிய தானும் அன்று அவ்வருத்தத்தை உணர்ந்துதான் தீர வேண்டும் என்பதை அவன் அறிந்தான். அத்துயர் நீங்குவதற்கு ஒரே வழி சைக்கீயை மணப்பது தான் என்பதையும் அவன் உணர்ந்தான்.

ஆனால், அவளை மணப்பது எப்படி? இறுதியாக அவன் பரிதிக் கடவுளான அப்பாலோவிடம் சென்று தனக்கு உதவும்படி கேட்டான். அப்பாலோவும் அதற்கு வழி கிடைத்தால் உதவுவதாகக் கூறினான். விரைவில் அதற்கேற்ற வாய்ப்பும் ஏற்பட்டது. சைக்கீயின் தந்தையான அந்நாட்டு அரசன் தன் நாடு முன்போல் செழிப்பாக இல்லை என்பதையும், தன் நாட்டு மக்கள் முன்போல் மகிழ்வுடன் வாழவில்லை என்பதையும் கண்டு வருந்தினான். மேலும், தன் அருமை மகளான சைக்கீக்கு ஏற்ற கணவன் இன்னும் கிடைக்கவில்லையே என்றும் அவன் வருந்தினான். எனவே, அவன் அப்பாலோ கோவிலுக்குத் தன் ஆட்களை அனுப்பி, தன் நாட்டில் இவ்வாறு துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பதைக் கேட்டுவரும்படி கூறினான்.

அப்பாலோ அந்த ஆட்களிடம்

பின்வருமாறு

தெரிவித்தான். சைக்கீ, பூவுலக மக்களுக்கு ஒவ்வாத பேரழகு பெற்று, தெய்வங்களிலும் சிறந்து விளங்குவதால் கடவுளர்கள் சினங்கொண்டிருப்பதாகவும், அந்நாட்டில் அமைதி ஏற்பட வேண்டுமானால், சைக்கீயை மணமகள்போல் அணிசெய் வித்து மாலை நேரத்தில் கடற்கரையிலுள்ள பெரும்பாறையருகில் கொண்டுபோய் விட்டு விட்டு வந்துவிட வேண்டுமென்றும், கொடிய கடல் பூதம் வந்து அவளைத் தூக்கிச் சென்றுவிட்டால் கடவுளரின் சினம் தணிந்து விடுமென்றும், பூதம் வரும் நேரத்தில் பெண் இல்லாமற் போனால், அது ஊருக்குள் வந்து ஆண்,பெண், குழந்தை ஆகிய எல்லோரையும் கொன்று தீர்த்துவிடும் என்றும் அப்பாலோ கூறினான்.

அதைக்கேட்ட மன்னன் பெருந்துயரத்தில் ஆழ்ந்தான். சைக்கீயை அக்கொடிய பூதத்திடம் ஒப்புவிக்க அவன் இணங்கவில்லை. தன் நாட்டைத் துறந்துவிட்டு, மகளுடன் எங்காவது ஓடிவிடலாம் என்று கூட அவன் நினைத்தான்.