உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

105

தேர் ஏறி ஓட்டப்பந்தயங்கள் நடத்திய காலத்தில், முதல்நாள் விழாவை நெப்டியூன் விழாவாகவே கொண்டாடினார்கள்.

பரிதிக்கடவுளான அப்பாலோவும், நிலவொளித் தெய்வமான டயானாவும் இரட்டைப் பிள்ளைகளாகப் பிறந்த உடன் பிறந்தவர்கள்.

அவர்கள் கைப்பிள்ளைகளாக இருக்கையில் அவர்களின் தாயைச் சீயஸ் கடவுளின் மனைவியான ஹீரோ மிகவும் கொடுமைப்படுத்தினாள். அத்தாய் தன்னிரு குழந்தைகளையும் எடுத்துக்கொண்டு அடிக்கடி இடம் விட்டு இடம் பெயர்ந்து ஓட வேண்டியதாக இருந்தது. கடைசியில் சாவாவரம் பெற்றிருந்த தீமிஸ் அவள்மீது இரக்கம்கொண்டு, அப்பாலோவைத் தன்னிடம் விட்டுச் செல்லும்படி கூறியிருந்தாள்.

தீமிஸ், அப்பாலோவை அணையடைத் துணியில் சுற்றிக் கட்டிவைத்து அமிழ்தத்தைக் கொடுத்து வந்தாள். அதை உண்ணும் அப்பாலோ நாள்தோறும் அதிக அழகும் வலுவும் பெற்று வளருவான் என்று தீமிஸ் கருதினாள். ஆனால், அமிழ்தம் அவன் வாயில் பட்டதோ இல்லையோ அப்பாலோ தன் கட்டுகள் தெறிக்கும்படி துள்ளி எழுந்து, வியப்புற்ற தீமிஸின் கண்முன்னாகவே ஓங்கி உயர்ந்து வளர்ந்து ஓர் அழகிய இளைஞனாகத் திகழ்ந்தான்.

அவன் கண்கள் நீலக் கருவிழி படைத்திருந்தன. அவன் தலைமயிர் நீண்டு பொன்மயமாய் இருந்தது. அவன் முகம் தெளிவுடனும் ஒளியுடனும் விளங்கிற்று.

ஒரு யாழும் ஒரு வில்லும் தரும்படி அப்பாலோ தீமிஸிடம் கேட்டான்.“பொன்யாழ் தனக்கு எப்போதும் பக்கத் துணையாக இருக்கும்; வில் தனக்கு வேடிக்கைப் பொருளாக இருக்கும்,” என்று அவன் கூறினான். மேலும் தான் மக்களுக்கு நிமித்தம் பார்த்து எதிர்காலக் கேடுகளை முன்கூட்டியே எடுத்துக்கூறப் போவதாகவும் அப்பாலோ,தீமிஸிடம் உரைத்தான்.

ஒலிம்பசுத் தெய்வங்கள் அவனை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். பரிதியின் தேரை அவனிடம் அவர்கள் கொடுத்து ஓட்டச் சொன்னார்கள்.