உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

அப்பாத்துரையம் - 40

கைகள் இரண்டையும் முட்டியிட்டு வீசிக்கொண்டு தலையையும் கொம்பையும் தாழ்த்தியவண்ணம் அது தீஸியஸ் மீது பாய்ந்தது.

அரியட்னே மினோட்டாரின் உருவத்தைப் பற்றிப் பலவும் கேள்விப்பட்டிருந்தும், அதை நேரே கண்டவுடன் நடுநடுங்கிச் செயலிழந்தாள்.

மினோட்டார் பாய்ந்து அருகில் வருமளவும் தீஸியஸ் அசையாமல் நின்று அருகில் வந்ததும் விலகிக்கொண்டு, அதன் கழுத்தில் வாளால் ஓங்கித்தாக்கினான். அது மினோட்டாரைக் காயப்படுத்திற்று. நோவால் அலறிக் கொண்டு அது மீண்டும் அவன் மீது பாய்ந்தது. மீண்டும் மீண்டும் தீஸியஸ் விலகி அதைத் தாக்கினான். ஆனால், கடைசித்தடவை அது மூர்க்கமாகப் பாய்வதுகண்டு, விலகாமல் வாளை உறுதியுடன் அதன்மீது பாய்ச்சினான், வாளின் வேகமும் மினோட்டாரின் பாய்ச்சலும் ஒருங்கு சேர்ந்து மினோட்டாரைக் கிட்டத்தட்ட இரண்டாகப் பிளந்தது. காடெங்கும் அதிரும் வண்ணம் அலறிப் புடைத்துக் கொண்டு அது விழுந்தது.

அரியட்னே அச்சத்தால் உணர்விழந்து ஒரு பாறை மீது சாய்ந்தாள். தீஸியஸ் தன் கைக்குட்டையால் வீசி அவளுக்கு உணர்வு வருவித்தான். புழுதி படிந்து சோர்ந்த அவள் முகத்தின்மீது பாறையொன்றின் பின்புறமாக விழும் கதிரவனின் பொன்னொளிபட்டு அதை மாலை நிலாப்போல மிளிரச்

செய்தது.

மினோட்டாரின் இறுதிக் கூக்குரல் மினாஸையே தட்டி எழுப்பியிருக்கும் என்பதை அரியட்னே அறிவாள். ஆகவே, அவள் தீஸியஸை விரைவுபடுத்தினாள். வெளியே செல்ல அவள் என்னவழி வகுத்திருக்கிறாள் என்பதைத் தீஸியஸ் அப்போதுதான் கவனித்தான். அவள் ஒரு பெரிய உண்டைநூலைக் கொண்டு வந்திருந்தாள். மருட்கோட்டத்துக்கு வெளியே ஒரு மரத்தில் அதன் ஒரு கோடியைக் கட்டிவிட்டு, வரும்வழி நெடுக உண்டையை அவிழ்த்து நூலை நெகிழ விட்டுக்கொண்டே வந்திருந்தாள். இப்போது அவள் அந்த நூலை மீண்டும் உண்டையில் சுற்றிக்கொண்டே நூலைப் பின்பற்றி வெளியே தீஸீயஸுடன் சென்றாள்.