உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. நீர் அணங்கு

வடக்கே நெடுந்தூரத்துக்கு அப்பால் பகலவனின் வெயில் ஒளியில்பட்டு மின்னிக்கொண்டு வான்முகட்டை முட்டி நிற்கும் மலை உச்சிகளுடன் வியப்பான கற்சிலை வடிவங்கள் போலவும், நீலத்திரையில் எழுதிய கண்கவர் உருவங்கள் போலவும் இமயமலை முடிகள் விண்ணளாவி நிற்கின்றன.

என்றும் அழியாது படிந்திருக்கும் பனிவட்டத்துக்குக் கீழே உள்ள மலைப்பாறைகளில் வான மகளிரோ, வன தேவதைகளோ தூவிச் சென்றனர் என்று சொல்லும்படி, அத்தனை அழகழகான பூச்செடிகள் கண்ணைக் கவர்வனவாகக் காணப்படும். செக்கச் செவேரென்ற கடப்ப மலர்களும், பொன்நிறம் படைத்த செண்பக மலர்களும், கருமையும் மஞ்சளும் கலந்த வேங்கைப் பூக்களும், வெண்மையான மரமல்லிகைகளும், செங்காந்தளும், நீலமும், குறிஞ்சியும், முல்லையும் விரவிநின்று வானவில்லின் தோற்றம் போல் பேரழகுடன் அங்கே விளங்கும்.

அம்மலர்களுக்கும் மலைகளுக்கும் நடுவே, மலை மகளின் திருமுடியினின்றும் விழுந்த நீலமணிபோல் அங்கே ஓர் ஏரி இருக்கிறது. அளவில் சிறிதாயினும் அழகில் பெரிதாயிருந்த அந்த ஏரி நீரின் தெளிவையும் ஆழ்ந்த நீல நிறத்தையும் பார்த்தவர்கள், வானத்தின் சிறிய துண்டு ஒன்று உடைந்து அங்கே விழுந்து கிடக்கின்றதெனக் கூறுவார்கள்.

அச்சிறிய ஏரி ஊருக்கு வெகு தொலைக்கு அப்பால் இருக்கிறது.பொதுவாக மனிதனோ, விலங்கினமோ அதனருகில் வருவதே அரிது. எப்போதோ ஒருகால், வழிதவறி வரும் கவரிமான் அந்த ஏரியின் தெளிந்த நீரைப் பருகிச் செல்லக்கூடும். மேலே நீலவானத்தில், அதிக உயரத்தில் பருந்தோ, கழுகோ தன் இரையைக் குறிபார்த்து வட்டமிட்டுப் பறக்கும்.