உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




180

அப்பாத்துரையம் 40

-

அந்த ஏரி அவ்வளவு எழிலுடனும் அமைதியுடனும் விளங்குவதையும், அந்த மலையிடம் நெடுந்தொலையில் சந்தடியின்றி இருப்பதையும் கவனித்தால், அந்த இடத்தின் அமைதிநிலை ஒருபோதும் குலைக்கப்பட்டிராது என்றே கருதத் தோன்றும். ஆயினும், படிகத் தெளிவுடன் கூடிய அதன் குளிர்ந்த நீர் அதன் ஆழ்ந்த கசத்தில் மாய ரகசியம் ஒன்றை மறைத்து வைத்திருக்கிறது என்பதை நான் கூறினால் நீங்கள் நம்ப வேண்டுமே! அந்த ரகசியம் எட்டுத் திசையிலும் வீசும் காற்றுக்குத் தான் தெரியும்: அந்தக் காற்றோ என்றால், கீழே நெருங்கி வளர்ந்துள்ள கடப்பமரத்துக்கு அதைச் சொல்லும்; அல்லது காட்டுக்குத் தெய்வமான காளிக்குச் சொல்லும்.

அன்றொரு நாள் நிலவெறிக்கும் நள்ளிரவில், அந்த ஏரிக்கரையருகில் உள்ள கல்லின்மீதிருந்து வானத்திரையில் ஒளிரும் சுடர்மீன்களை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்துக்கொண்டு, ஏரியிலிருந்து கிளம்பிக் கீழே மனிதர்கள் வாழும் தரைமட்டத்திற்கு விரைந்து பாயும் கானாற்றின் சலசலப்புத் தாலாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அந்த ரகசியத்தை அங்கே வீசிய மெல்லிய பூங்காற்று காதோடு காதாய்க் கூறிச் சென்றது. அந்த ரகசியத்தை நான் உங்களுக்குஞ் சொல்லப் போகிறேன்:

யாரும் அறிந்திராத நெடுங்காலத்துக்கு முன்னால், கீழே இருந்த கடம்பவனத்துக்குப் பக்கத்தில், மலைச்சாரலில் ஒரு சிறிய குடிசை இருந்தது. அக்குடிசையில் பெருங்குறத்தி என்றொரு கிழவியும், மலை அழகன் என்னும் அவள் மகனும் குடியிருந்து வந்தார்கள். மலையழகன் பேருக்கேற்பப் பேரழகனாகவே விளங்கினான்.அடிவாரத்தில் வாழும் மலைக்குடிகளில் எல்லாம் அவனே ஒப்பற்ற எழில் பெற்றவனாக இருந்தான்; நெடிய உருவமும், கருத்துச் சுருண்ட தலைமயிரும், வளைந்த புருவமும், அகன்ற விழிகளும், எப்போதும் மகிழ்ச்சி குதித்தாடும் கருவிழிகளும் கண்டோர் மனதைக் கவரும் அழகுடன் விளங்கின. ஒரு முறை அவனைப் பார்த்தவர்கள் ஒருநாளும் அவனை மறக்க முடியாத உடல் அழகு அவனுக்கு இருந்தது.

மலை அழகனும், அவன் தாய் பெருங்குறத்தியும் வறுமையே காலங்கழித்து வந்தனர். அவர்களிடம்

அறியாதபடி