உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

191

அங்கேயே தின்றுவிட்டிருக்காதா என்ன? என் புத்திக்கு, அது நமது நன்மைக்குத்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது என்று படுகிறது; பிள்ளைக்கு ஒன்றும் கேடு நேராது. நம்மோடு இருந்தால்மட்டும் என்ன? பச்சைக்கிளி பசி பட்டினியால் வாடிச் சாகத்தான் போகிறாள் இந்த வழியையுந்தான் பார்ப்போமே,” என்று அவள் கணவனிடம் கூறினாள்.

அவள் பேச்சு பெரியண்ணனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.எப்போதுமே அவன் அவளிடம் யோசனை கேட்பான். எனவே, மறுபேச்சின்றி உள்ளே சென்று தன் கடைசிப் பெண் பச்சைக்கிளியைக் கையில் அணைத்து எடுத்துக்கொண்டு பழைய மருதமரத்துப் பக்கம் வந்தான். ஓணான் அவன் வருகைக்காகப் பொறுமையோடு காத்திருந்தது. அதன் விருப்பப்படி பெரியண்ணன் நடந்ததைக் காண அதற்கு மிகவும் மகிழ்ச்சி உண்டாயிற்று. தங்கப்பணம் நிறைந்த பை ஒன்றை அது அவன் கையில் கொடுத்தது. பச்சைக் கிளியை அதன் முதுகில் வைத்துக்கொண்டு, “இவளுக்கு நான் அம்மையும் அப்பாவுமாக இருந்து வளர்த்து வருவேன். கவலைப்படாதே போ,” என்று கூறிவிட்டுப் பாதாளக் குகைக்குள் புகுந்துவிட்டது.

பெரியண்ணன் தங்கப்பணம் நிறைந்த பையைத் தூக்கிக் கொண்டு, வீடுநோக்கித் திரும்பினான். அவன் அதற்குமுன் தங்கப்பணத்தைக் கண்ணால்கூடப் பார்த்தது கிடையாது. எனவே, அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஓணான் ஏதோ அன்புள்ளதாகத்தான் தெரிந்தது. அவ்வளவு பணத்தையும் வைத்துக் கொண்டு மீதிக் குழந்தைகளைச் செல்வமாக வளர்த்து நகைபோட்டுத் திருமணம் பண்ணிக் கொடுக்கலாம்; வயது காலத்தில் அவனும் அவன் மனைவியும் துன்பப்படாமல் வாழலாம் என்றும் நினைத்தான். அன்று இரவு பெரியண்ணன் வீடுசென்றதும் வீட்டில் ஒரே கொண்டாட்டமாகத்தான் இருந்ததென்பதைச் சற்று வருத்தத்தோடு சொல்லத்தான் வேண்டியி யிருக்கிறது. குழந்தைப் பச்சைக்கிளியை யாரும் தேடவில்லை. மீதிப் பதினொரு குழந்தைகள் இருப்பதால், ஒன்று குறைந்தது என்ன வேறுபாட்டைக் காட்டிவிடப் போகிறது? மேலும் அதுவோ சின்னஞ் சிறியது.