உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வியப்பூட்டும் சிறுகதைகள்

66

269

'உன் அறிவுரையை மீறித்தான் போக இருந்தேன். ஆனால், அமைந்து சிந்தித்தபின், நான் அதையே பின்பற்றுவதென்று திட்டமிட்டேன். இளமனைவியின் துயர் தோய்ந்த முகமும் அன்னையின் வாட்டமும் உன் பக்கமே இருந்தன. ஆகவே, ஒப்பற்ற நண்பனாகிய உன்னையும் அவர்களையும் விட்டுப்போக மனமில்லாமல் வந்துவிட்டேன். மேலும், முயற்சி செய்பவனுக்கு எந்த ஊரானால் என்ன? என்னிடம் இன்னும் சிறிது பணம் இருக்கவே இருக்கிறது. அதைக்கொண்டு ஏதேனும் தொழில் செய்யலாம் என்று எண்ணுகிறேன். நண்பனாகிய உன் அறிவுரையும் ஒத்துழைப்பும் அதில் மிகுதி தேவைப்படும். அதனாலேயே திரும்ப வீடு செல்லுமுன் உன்னையும் என்னுடன் இட்டுப்போகவந்தேன்.என் கருத்தை மாற்றிய நண்பன் நீ.ஆகவே, உன்னைக்காண என் மனைவியும் தாயும், மகிழ்வது உறுதி. ஆதலால் என்னுடன் அன்பு கூர்ந்து வீட்டுக்கு வா. என் விருந்தினனாக இருந்து எனக்கு ஆதரவளி” என்று கைப்பற்றி இழுத்தான்.

நண்பன் மும்முடி எப்போதுமே கோமாறனிடம் பற்றார்வம் கொண்டவன். ஆயினும் கோமாறன் இவ்வளவு குளிர்ச்சியாகப் பேசி அவன் என்றும் கேட்டதில்லை.இது அவன் உள்ளத்தில் புத்தார்வம் எழுப்பிற்று. அவன் கோமாறன் உருவில் வந்த குறளிமாறனுடன் புறப்பட்டான். குறளிமாறன் திட்டத்தின் ஒரு பெரும்பகுதி இப்போது வெற்றி பெற்றது. ஏனென்றால், மும்முடியின் உதவி கொண்டே அவன் கோமாறன் மனைவியையும் தாயையும் கண்டுணர்ந்து, அவர்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளப் பழகினான். மும்முடியின் பேச்சு, போனவன் உடனே திரும்பியதற்கான விளக்கமும் அளித்தது. கோமாறன் வாழ்வுபற்றிய பல செய்திகளைக் குறளிமாறன் அறிந்து பயன் படுத்தவும் முடிந்தது.

குறளிமாறன் முன்பு குடியிருந்த மரத்தடியில் ஒரு புதையல் இருந்தது. அவன் அதைப் பல ஆண்டுகள் காத்துக்கொண்டே வந்திருந்தான். இப்போது ஓர் இரவில் அவன் அங்கே சென்று அதை எடுத்து வந்தான். கோமாறன் வீட்டிலேயே ஓரிடத்தில் அதை ஒளித்துவைத்தான்.