உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் – 43

106 || கணிக்காமலும், தோழர்களாகக் கொள்ளாமலும் வேறு தனி உலகம் அல்லது தனி இனமாகக் கருதும் பழக்கம் குழந்தைப் போதிலிருந்தே எதிர்பாலருடன் பழகி அவர்கள் வளர்ச்சியுடன் நேய வளர்ச்சி பெறாததனாலேயே ஏற்படுகிறது. இருபாலாராலும் தோழர், உடன் பிறந்தார், நண்பர், மூத்தோர், இளையோர் என்ற பல்திற உறவுகளையும் இயல்பாகக் கொண்டு பழக அறியாத ஆண்பெண் பாலார், புறத்தே நாகரிகப் போர்வை போர்த்த விலங்கினும் கேடான மனிதரேயாவர். பெண்டிரனைவரையும் தமக்குரிய இன்பப் பொருள்களாகவும் தொட்டால் வாடிப்போகும் உடைமைகளாகவும் ஆண்கள் கருதுவதும்; ஆடவர் எல்லாரும் அஞ்சி விலகுதற்குரியர் என்றோ. அண்டிப் பசப்பிட வாழ்க்கைக்கு வழியாதற்குரியர் என்றோ பெண்டிர் கருதுவதும் ஆகிய இவ் விரண்டும் மனிதரென்ற அடிப்படையில் ஒருவர் மனத்தின் பரப்பை முழுவதும் மற்றவர் அளந்துணராததனாலேயே யாகும்.

பிள்ளைகள் காதல் வாழ்வின் சிறப்பையும் உயர்வையும் வேறெவ் விடத்திலிருந்தும் பெறமுடியாது - தம் குடும்பத்தின் தலைமைத் தெய்வங்களாகிய தாய் தந்தையரிடமிருந்தே அறிய வேண்டும். ஆடவர் உறவுகளுக்கெல்லாம் தந்தையும், பெண்டிர் உறவுகளுக்கெல்லாம் தாயுமே ஒருவர் உள்ளத்தில் மூல முதலாகத் தோற்ற வேண்டும். ஆண் பெண் தொடர்பு இழிவுடையதெனக் கருதுபவரும், அதனைப் புறந்தோற்றாது காப்பது அதன் மறைக்கும் பண்பு காரணமாக என்று எண்ணுபவரும் தம் தாய் தந்தையரை உள்ளத்துக்குள்ளாக அவமதிப்பவரே யாவர். இத் தீயபண்பு உலகில் பரந்து விட்டதற்குச் சான்று, கடவுளை அன்னையாகக் கொண்ட பண்டை மனிதன் மரபினர் அன்னை வடிவாம் பெண்டிரை இழித்தும் அவர்களை விலக்குந் துறவையும் மடத்து வாழ்வையும் உயர்த்தியும் வருவதேயாகும்.

பிள்ளைகள் உடல்நலம், மிகுதி உழைப்பு, மிகுதிப் படிப்பு ஆகியவற்றால் கெடாமல் பார்த்துக்கொள்ளல் வேண்டும். இன்ப விளையாட்டுகள், உலாவல், தொடர் ஊர்திப் பயணம், நல்லுரையாடல்களால் உடல் நலமும் உள நலமும் ஒருங்கே பேணல் வேண்டும்.

உளநலத்துக்கும் அறிவு நலத்துக்கும் உடல் நலம் தேவையில்லையென்று கருதுவது முற்றிலும் தவறு. ஆனால், இக்