108
அப்பாத்துரையம் - 43
எல்லா உறுப்புகளின் உழைப்பும் ஒத்தியிருப்பதே. ஒத்த உடல் நலம் பேணுவதாகும். மூளையும் உறுப்பாதலால், அது வளராத இடத்தும் முழு உடல்நலம் ஏற்படாது. உடல் வலுவும் உள வலுவும் ஒத்திருக்கும் நிலையே, உடல் நலமும் நீண்டவாணாளும் தருவதாகும்.
பிள்ளைகள் வளரவளர அவர்களைத் தற்சார்புடையவர் களாக்கி, சரிசம நிலையுடையவராக நடத்துதல் வேண்டும். அறியாத ஒருவரிடம் அறிவுறுத்திக் கூறும் உரையாடல் முறையிலன்றி, அறிந்தவரிடையே உரையாடும் உரையாடல் முறையிலேயே அவர்கள் வருங்கால வாழ்க்கைக்கு வேண்டிய பொறுப்பு, கடமை, உரிமைகள் யாவற்றையும் உணரச் செய்தல் வேண்டும். பிள்ளைகள் காதல் வாழ்வு, குடும்ப வாழ்வு தொடங்கியப்பின் குடும்பம் கூட்டுக் குடும்பமாயிருந்தால்கூடத் தனியாக வேறு உட்குடும்பமாக, ஆனால் அதேசமயம் அன்பாதரவுடன் நடத்துதல் வேண்டும். கூட்டுக் குடும்ப முறை நாகரிக முறையன்று என்றுகூடத் துணிந்து கூறலாம். ஏனெனில், அஃது உண்மையில் சமூகம் வளர்ச்சி பெறாத காலத்திலுள்ள பழங்காலச் சிறு சமூகத்தின் சின்னமே. இன்றும் சில இடங்களில் இச் சிறு சமூகம் கூட்டுறவு ஊர்களாகவும் இயங்கியுள்ளன. வற்றில் பல நற்பண்புகள் இருந்தாலும், இவற்றினைக் கையாண்டவர் வழக்காற்றுப் பண்புகள், குருட்டுப் பழக்கமாக இறுகிக் கெட்டுவிட்டன. ஆகவே, இக்கூட்டு முறைகள் தனி மனிதன் உரிமைகளை அடக்கி வைக்காத முறையில் புதுப்பிக்கப்பட வேண்டு மேயன்றி பழைய முறையில் நீடித்தல் தகாது. பழங்காலக் கூட்டுக் குடும்பம் மனித வளர்ச்சியுடன் வளராமல் பிற்பட்டுவிட்டதன் காரணமாகவே, குடும்பப் பூசல்களும் பொறாமையும் போட்டியும் பெருகின. மழை வெறித்தாலும் தூவானம் விடாததுபோல், இவை இன்னும் மக்களை விட்டப்பாடில்லை. இவை நீங்க வேண்டுமானால், குடும்பத் தலைவனையும், தலைவியையும் தலைவர் தலைவியாகவே தனியே விட்டுவைத்தல் நலம். தமிழர் பண்பு இவை என்பதைத் தலைவர், தலைவியர் என்ற பெயர்களே காட்டும்.