152
அப்பாத்துரையம் - 43
வழிப்போக்கன் காட்டு மலர்களை மிதித்துச் செல்லும் போது, அதைப் பற்றி எதுவும் கருதமாட்டான்.ஆனால் கவிஞன் அதன் அழகில் அல்லது மணத்தில் ஈடுபடுவான். அறிஞன் அதன் இனப் பண்பை ஆராய்வான். மணமுள்ள ஓர் இள மலருக்கு அதன் அழகையோ, அழகுள்ள இள மலருக்கு அதன் மணத்தை யோ ஏற்றக்கூடாதா என்று அவன் சிந்திப்பான்.
கடல் பெரும்பாலான மக்களுக்கு ஓர் எல்லையற்ற வெள்ளக்காடு.வேறு சிலருக்கு அது மனிதரால் செப்பம் செய்ய வேண்டாத இயற்கையின் கப்பற்பாதை. அது முத்துக்கள், பவளங்களின் சேமகலம் என்பதை மிகச் சிலரே எண்ணுவர். அறிவாராய்ச்சி பெருகும்தோறும் அதன் செல்வவளம் பற்றிய எண்ணம் வளரும். ஆனால் கலைஞனுக்கு அது ஓயா உயிர்ப்பும், கணந்தோறும் மாறும் உணர்ச்சிகளும், எல்லையற்ற ஆற்றலும் உடைய இயற்கையின் பரு வடிவமாகக் காட்சியளிக்கும்.
குட்டை, மலர், கடல் ஆகியவற்றைப்போலவே ஒவ் வொரு பொருளும் ஒவ்வோர் இன்ப துன்ப நிகழ்ச்சிகளும் மனிதர் பண்புகளுக்கேற்ற பண்பும், உருவமும், பயனும் உடையனவா யிருக்கும். கல்லாமனிதன் காணும் துன்பத்தினூடாகக் கற்றறி சிந்தையுடையவன் இன்ப அமைதிக்கு இன்றியமையாத காரண காரியத் தொடர்பு வடிவான அறிவுரைகளைக் காண்பான். பருப்பொருளின் அறிவியல் வாதி எல்லையற்ற அழிவே காணும் இடங்களில், மறை தெய்வ இயல் வாதி எல்லையற்ற பேருயிரின் நாடித் துடிப்பை உணர்வான்.
-
நாம் நம் எண்ணங்களைப் புறப்பொருள்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஆடையாகப் போர்த்துவதுபோலவே, பிறர் உள்ளங்களுக்கும் நம் எண்ணங்களின் வண்ண ஆடை தந்து அவற்றினூடாக அவர்களை அவர்கள் உள்ளங்களைக் கண்டறிகிறோம். எவரையும் நாம் நம் வண்ணமாகவே காண்கிறோம் என்பது நமக்குப் பெரும்பாலும் புலப்படுவ தில்லை. ஆனாலும் அதைத் தெளிவுப்படுத்துவது எளிது. வண்ணக் கண்ணாடி அணிந்தவன் எல்லாப் பொருள்களின் வண்ணத்தையும் காண்கிறான். அதுபோல ஐய மனப்பான்மை யுடையவன் எல்லாரையும் ஐய மனப்பான்மையுடையவர் என்ற பொது நோக்குடனேயே காண்பான்.