திருநிறை ஆற்றல்
153
பொய்யன் எல்லாரும் பொய்யரே என்ற உறுதியுடன் தான் இருப்பான். அதுமட்டுமன்று. வாய்மையுடையவர் எவருமே உண்மையில் இருக்கமுடியாது என்றும்; தலைசிறந்த பொய்யர்களே வாய்மையுடையவர் என்று தம்மைப் பிறர் நம்ப வைக்கின்றனர் என்றும்; அறியா மட்டியாயிருந்தாலல்லாமல், ஒருவன் எவரையும் வாய்மையுடையவன் என்று நம்பமாட்டான் என்றும் அவன் உறுதியாகக் கொள்கிறான். பொறாமை யுடையவன் இது போலவே எல்லாரிடத்திலும் பொறாமையை யும், கஞ்சன் எவரிடத்திலும் பண ஆசையையும் காண்கிறான்.
தன் அகச்சான்றைக் கொன்றடக்கிப் பொருள் திரட்டி யவன், குண்டு செறித்த துப்பாக்கியைக் கையில் அணைத்துக் கொண்டே தூங்குகிறான். தன்னைப் போலவே எல்லாரும் அகச்சான்றைக் கொன்று பொருளைப் பறிக்கக் கங்கணங் கட்டிக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணித்தான் அவன் அஞ்சி வாழ்கிறான். காமுகன் எல்லாரும் காமுகராயிருப்பதே இயல்பு என்று நினைக்கிறான். பொறியடக்கிய புங்கவர் எவரையும் கண்டால், அவன் அவர்களைத் தன்னிலும் திறமை மிக்க பாசாங்குக்காரர் கயவர் என்றுதான் கருதுவான். காமுகப் பண்பற்ற மனிதரும் இருக்கக்கூடும் என்று அவன் கனவிலும் கருத
மாட்டான்.
‘அற்பண்பினரை'ப் போலவே ‘நற்பண்பின'ரும் எல்லாரை யும் தம் வண்ணமாகக் காணும் வழுவுடையவரே. ஆனால் இவ் வழு அவ் வழுவுடையாரைக் கெடுக்கும் இடத்தில் கூட, உலகத்தை உயர்த்தும் வழு ஆகும். உறுதியுடையாரிடத்து இது வழு வாயமையால், சூழலையே மாற்றியமைக்கத் தக்கதாகும்.
அன்பு கனிந்த எண்ணங்களை உடையவர்கள் எல்லா ரிடமும் அன்பும் கனிவும் கொள்கின்றனர். அறச் சிந்தனை யுடையவர்கள் பிறர் நலங்கள் கண்டு மகிழ்கின்றனர். அழுக்காறு என்பது எப்படியிருக்கும் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். கடவுட் கருத்துடையவன் காண்பவரிட மெல்லாம், காண்பவற்றினிட மெல்லாம் கடவுட் பண்பே காண்பான்..கடவுளிருக்குமிடம் பற்றி அவன் ஐயுறவு கொள்ள மாட்டான்; கடவுளில்லாத இடம் பற்றியோ, அவனுக்குச் சிந்தனையே ஏற்படாது!