(224) ||__.
அப்பாத்துரையம் - 43
அடுத்தபடி சிந்தனைக்குரிய நேரம் ஒன்று உண்டு. அதுவே உன் நாள் அலுவல் முற்றியபின் நீ ஓய்வுகொள்ளப் போகும் போதுள்ள இராநேரம். துயிலெழுமுன் இயற்கை தரும் அமைதி நேரத்துடன், துயிற்படுமுன் இயற்கை தரும் இந்நேரம் பேரளவு ஒப்புடையது. ஆனால் கடுமையான உழைப்புக் காரணமாக இதுவும் உனக்கு அரிதாய்விட்டால், அப்போதும் நீ அயர்ச்சியுற வேண்டியதில்லை. இயற்கைதரும் இவ்வமைதி நேரங்களுக்கு அடுத்த படியாக, உன் வேலையினிடையே உனக்குக் கிட்டும் ஓய்வுவேளைகளில் ஒரு சிறுபகுதியை நீ பயன்படுத்த லாம். ஓய்வுடன் ஓய்வாகச் சிந்தனையில் செலவிடும் இப்பகுதி உன் ஓய்வை ஊறுபடுத்தாது. ஏனெனில் ஓய்வுதரும் அமைதியின் பின் நீ முயற்சியில் பெறும் புத்தாற்றலைவிட, சிந்தனை அமைதியின் பின் நீ பெறும் கிளர்ச்சி மிகுதியா யிருக்கும். இத்துடன் சிந்தனையின்போது நீ பெறும் பயிற்சியால், உன் அகநாட்டமும் பண்பும் உயர்வுபெறும். உன்னுடன் உழைப்பவர்களுடன் உழைத்துக் கொண்டே நீ அவர்கள் உள்ளங்களுக்கெட்டாத உயர் அகவெளியில் உலவத் தொடங்குவாய், நாளடைவில் ஓய்வு நேரத்தில் மட்டுமன்றி, உழைப்பு நேரத்தில்கூட உன் உள்ளம் அறிவின் அறிது யிலமைதியில் அளவளாவி ஒளிதிகழும்.
அகமுகச் சிந்தனையும் தன்னடக்க நிறைஅமைதி யும் இணைபிரியாத் தோழமை உடையன. அகமுகச் சிந்தனை தன்னறிவைத் தூண்டுகிறது. தன் குறைபாடுகள், பிழைகள், தன் உள்ளார்ந்த அவா முனைப்புகள் ஆகியவற்றையும் பொருளுலகின் வாய்மையையும் மாற்றி அது ஆராய்ந்து நன்முடிவு காண முயல்கிறது. தன்னையும் உலகச்சூழலையும் ஒருநிலைப்பட வைத்தாராய்வதால், ஏற்படும் நடுநிலைமை யமைதியே வாய்மையை உணரும் பாதைக்கு வழிகாட்டி ஆகும். இந்த நடுநிலைமையில்லாதவர் சுக்கானில்லாமல் கடலில் மிதக்கும் கலங்கள் ஆவர்.
ஒருவேளை உன்னிடம் வெறுப்பும் சீற்றமும் அடிக்கடி வெறியாடலாம். நடுநிலை அமைதி பெற்றபின் இப்பண்புகளே சீற்றம் பொறுக்கும் பொறுமையமைதி யாகவும் வெறுப்பையும் பகைமையையும் பொருட் படுத்தாது மன்னிக்கும் அருளமைதியாகவும் மாறிவிடும்.