உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

அப்பாத்துரையம் – 43

குறிக்கோள்களிலெல்லாம் மீஉயர் குறிக்கோளாகிய இயற்கை யளாவிய தெய்விக அன்புத்தத்துவம், அகநிலைத் தத்துவங் களில் தலைசிறந்த தத்துவமாக மட்டுமன்றி, அத்தத்துவங் களைத் தத்துவங்களாக ஆக்கி அளித்து வளப்படுத்தும் உயிர்த் தத்துவம் ஆகவும் விளங்குகிறது. இத்தத்துவங்களையே சமயவாணர் கடவுளின் கண்கண்ட வடிவமென்று சிறப்பித்தனர். கண்ணும் கருத்தும் கற்பனையும் கடந்த அறிவு வடிவம், வாய்மைவடிவம் ஆகியவற்றைவிட இது எளிது மட்டுமல்ல. அவற்றுக்கு வழிகாட்டுவதுபோல அவற்றைக கடந்தும் நிற்பது. ஏனெனில் அது உயிரைப் பயிற்றுவித்து வழிகாட்டித் தன்னை நோக்கி ஈர்க்கும் உயிர்த்தத்துவமாயியங்குகிறது. அவனருளாலே அவனையே குருவாகக் கொண்டு அவன் தாள் வணங்கி அவனை அடைதல்” என்ற உயிருக்கு உயிரான கடவுள் தத்துவத்தின் இலக்கணத்துடன் இவ்வன்புத் தத்துவத்தின் இலக்கணம் முழுவதும் ஒப்பாகும். ஏனெனில் இவ்வன்புத் தத்துவமே கடவுள் தத்துவத்தின் முழுநிறை வடிவம்.

66

உணர்ச்சியற்ற தன்மையடைந்தவன் உணர்வற்றவனா யிருப்பான் என்று பலர் எண்ணுகின்றனர். இது தவறு. உணர்ச்சியற்ற தன்மை என்னும்போது நாம் உணர்ச்சி யழிந்த தன்மை என்று கொண்டுவிடக்கூடாது. உணர்ச்சியின் தானே இயங்கும் அலையெழுச்சிகளை நாம் அடக்கி, அவற்றை வேண்டும்போது வேண்டிய திசையில், அளவில், உருவில், இயக்கத்தக்க உணர்ச்சியமைதியையே நாம் உணர்ச்சியற்ற தன்மை என்று கொள்கிறோம். இத்தன்மையிலிருந்துதான் அறிவின் ஆற்றல் பிறக்கிறது. இவ்விரண்டின் கூட்டுறவினால் தான் தன்னலம் அழிந்து தன் முனைப்புக் குறைய முடியும். இவையாவும் அழிவுற்றபின் உணர்வமைதி, அறிவமைதி, பண்பமைதி என்ற மூன்றும் ஒருங்கேகூடிய முழுநிறை அமைதி, அஃதாவது அகநிலை ஆற்றல் கைவரப்பெறுகிறது. இவ்அக நிலை ஆற்றல் பெற்றவனுக்கு விருப்பம்வேறு, உணர்ச்சிவேறு, அறிவு வேறு, செயல்வெற்றி வேறு ஆகாது. விருப்பமே யாவுமாய், விரும்பியபடியே செயல்வெற்றி ஏற்பட்டுவிடும். அகநிலை ஆற்றல் இங்ஙனம் மனித உள்ளத்தின் சிந்தாமணியாய், அதன் கற்பகதருவாய், அதன் நிறையமுத கலமாய் அமைகிறது.