உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(280) ||__

அப்பாத்துரையம் - 43

களிடையேயும் எதிரலைகளை வளர்த்து இந்த அக அமைதி நிலையான உணர்வுப் பண்பாய் வளரும். இதைச் சிந்தனைக்குப் பயன்படுத்தி அறிவமைதியாக்கிய பின் அது நிலையான பண்பாய்,செயலுலகை இயக்குகிறது.

அமைதியின் வெற்றிக்கு இயற்கையமைதி சார்ந்த அதன் இயற்கை வலுவே காரணமாகும். அமைதியுடையவர் முன் னிலையில் அமைதியற்ற உணர்ச்சிவேகமுடையவர்க்கும் அகமுனைப்புக் குறைகிறது. தன்னலமுடையவரும் அது தளர்ந்து பொதுநலப்போக்குக் கொள்கின்றனர். புறஉலகில் நன்மை வெல்லாது, தீமை அடிக்கடி வெல்கிறது என்ற போலித் தத்துவத்தை இது பொய்யாக்குகிறது. தீமை வெல்லும் இடங் களைத் துருவி ஆராய்ந்தால், அங்கே நன்மை அகவாய்மையின் அமைதியற்ற போலி நன்மையாயிருப்பது நன்கு தெரியவரும்.

வாய்மையை நிலைநிறுத்த யாரும் போராட வேண்டுவ தில்லை. வாதாட வேண்டுவதில்லை. வாய்மையின் இயல்பு அமைதிபேணுதல். அமைதியின் இயல்பு அறிவும் சிந்தனை யும், அன்பும் பொதுநலமும் பேணுதல். இப்பண்புகளின் தனியியல்பினால் தீயபண்புகள் கருகித் தேய்ந்தழியும். வெற்றி உண்டாகும். முடிவிலாததாகத் தோற்றும் இருள் வரம்பு பட்டழியும். வரம்புடையதாகத் தோற்றும் ஒளி வரம் பற்றதாகிப் பரந்து நிலவும்.

அன்பின் அமைதி மனித சமுதாயத்தின் அடிப்படை அமைதி. அதுவே இயற்கையளாவிய அமைதியுமாகும். பலவிடங் களில், காலங்களில், இதனைப் பலர் பலவகைப் பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள்.ஆனால் அத்தனைக்கும் வடிவும்பண்பும் ஒன்றே. அதன் நடுமையத்தில் அதன் ஒருபெருங்கண்ணாய், உள்ளுயிரொளியாய் ஒளிர்வது வாய்மை. அவ்வொளியின் உயிர்க்கதிர் ஊடுருவப் பெற்று அவ்வமைதியின் சாயலுற்றவர் அழியாப் பொருளின் அழியா அன்புருவமாய் அமைவர். அதன்பின் அவர்கள் பண்பு, அவர்கள் கருத்து, அவர்கள் செயல் ஆகிய யாவும் இயற்கையின் பண்பு, இயற்கையின் கருத்து, இயற்கையின் செயல்கள் ஆகின்றன. அவை அழிக்கப்பெறாதவை, வெல்லப்பெறாதவை, மாற்றியமைக்க பெறாதவை.