(282) ||
அப்பாத்துரையம் – 43
மறுத்துத் துறவுவாழ்வே வாழ்ந்தனர். இத்துறவு உலகை வெறுத்த துறவன்று. உலகளாவிய பற்றுக் காரணமாகத் தம் தனிநலங்கள் துறந்த துறவே. அகநிறைவு நாடிப் புறந்துறந்த அகப்பற்றே இத்துறவு அவர்களுக்குப் பேரின்ப வழிகாட்டிற்று. ஆனால் அவர்கள் பேரின்பவாழ்வைக் கூடத் தமக்கென நாடியவர் களல்லர். உலகமாந்தர் அனைவருக்கும் அதே பேரின்பவாழ்வின் வழிகாட்ட அவர்கள் அந்த வாழ்வையும் தியாகம்செய்ய முனைந்திருந்தனர். அவ்வாழ்வை அவர்கள்
அதனால் இழக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் இது பேரின்பத்தின் இயல்பு. அது துறத்தலால் இழக்கப்படுவதன்று, பெறப்படுவது. கொடுத்தலால் குறைபடுவதன்று, நிறைவு பெறுவது. இதே பண்பு பேரின்பப் பண்பு சார்ந்த கல்வி, காதல், அன்பு, தன்மதிப்பு, அறிவுடைய தன்னலம் அஃதாவது பொதுநலம் ஆகிய வற்றிற்கும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
முனிவர், திருத்தொண்டர், ஆழ்வார்கள் ஆகியவர்கள் எந்தச்சமயம், கிளை, உட்கிளை சார்ந்தவராயினும், பிற நெறிகளை எதிர்க்கும் குறுகிய தன்முனைப்புக்கு ஆளாகாத வரை, ஒரே நிலைப்பட்ட பண்புடையவர்களே. அவர்கள் மக்கட் பணியாளர்கள். ஆழ்ந்த பணிவிணக்கமும், பொது நல வீறமைதியும் ஒருங்கே உடையவர்கள். தன்முனைப்பை அகற்றிய அளவில் அவ்வீறமைதி உலகளாவியதே. அத்துடன் அவர்கள் கொடுப்பவர்கள்; கொள்பவர்கள் அல்லர். கொள்வதுபற்றிய சிந்தனையே அற்றவர்கள். அவர்கள் உழைப்பவர்கள். உழைப்பிடையே கொள்ளும் ஓய்வையும் அவர்கள் உழைப்புக்கான ஊட்டமாகக் கொள்பவர்கள். இறந்தகாலம் பற்றிய கழிவிரக்கம், வருங்காலம் பற்றிய கவலை, ஆத்திரம் எதுவும் அவர்களிடம் கிடையாது. உழைப்பின் பலன், பரிசு, பாராட்டு எதுபற்றியும் அவர்களுக்குக் கவலை இராது. அவர்கள் உழுது விதைக்கும் உழவர்கள், ஆனால் உழுபலனைத் தரும் பொறுப்பை அவர்கள் இயற்கைவானிடமும், வாய்மை நிலத்தினிடமும் விட்டுவிட்டுப் பற்றற்றிருப்பவர்கள் ஆவர்.
உலகுக்கு உழைக்கவந்த உரவோர்களை உலக மக்கள் உயர்தெய்விகப் பிறப்பாக எண்ணிப் போற்றுகின்றனர். கருத்தளவில் இதில் தவறில்லை. ஏனென்றால் தெய்விக ஆற்றல்