நல்வாழ்வுக் கட்டுரைகள்
25
இன்ப உணர்ச்சியுடனும் தோய்ந்து அறிவு மருந்தையும் உணவையும் இனிய சிற்றுண்டியாக்கி இவை தருகின்றன. இவற்றால், அறிவு நூலைப் படித்துணரத்தக்க உளப் பண்பு வளர்ச்சியடைகிறது.
படிப்பதால் அறிவுப் பண்பு வளர்கிறது; சொற்பொருள் விளங்குகிறது; ஓரளவு சொல் திறமும் ஏற்படுகிறது. ஆனால் சொற்களைக் கையாண்டன்நிச் சொற்றிறம் வளர்வதில்லை. ஆகவே பேச்சையும் எழுத்தையும் வளப்படுத்தும் ஒரே சிறந்த வழி, பேசி எழுதிப் பழகுவதுதான். இறைத்த கிணரே ஊறுவதுபோல், பேசி எழுதிப் பழகுபவனுக்கே நூல் ஒப்பற்ற பயனுடையதாகும். படிக்கும்போதும் கேட்கும்போதும் செயலற்ற நிலையில் இருக்கும் அறிவு பேசும்போதும் எழுதும்போதும் செயல் நிலையடைந்து சொற்களின் பண்பில் கருத்துச் செலுத்துகின்றது. படிப்பவரெல்லாம் பேசவும் எழுதவும் முடியாததன் காரணம் இதுவே. அதேசமயம் கல்வியும் வாசிப்புமில்லாமல், ஒருவன் தற்கால இலக்கிய வளர்ச்சியிலோ அறிவியல் வளர்ச்சியிலோ இடம்பெறுதல் அரிது. ஏனெனில், அவன் இவ்வகையில் நாகரிகத் தொடக்ககால மனிதன் நிலையிலேயே பெரிதும் இருக்கக் கூடியவனாகிறான். எனவே இலக்கிய இலக்கண மொழியறிவும், பேச்சுப்பழக்கமும், எழுத்துப் பழக்கமும் சேர்ந்தே மனித நாகரிகத்தின் அடிப்படைப் பண்பாளராக ஒருவரை ஆக்க வல்லது. பேச்சுப் பழக்கம், எழுத்துப் பழக்கம் ஆகியவற்றின் இன்றியமையாக் கலைப் பண்பாட்டின் காரணமாகவே, “சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்” (ஒளவை: தனிப்பாடல்) என்ற மூதுரை எழுந்துள்ளது.
வாழ்க்கையில் முன்னேற விரும்பும் இளைஞன், இவற்றுடன் வாழ்க்கையைத் திட்டப்படுத்தும் வழக்கத்தையும் மேற் கொள்ளல் வேண்டும். இதற்கு மிகச் சிறந்த வழி நாட்குறிப் பெழுதும் முறையே. நாட்குறிப்பில் ஒருவன் தான் செய் வதனைத்தையும் எண்ணுவதனைத்தையும் குறிக்க வேண்டு மென்பதில்லை. அது முடிவதுமன்று; பயனுமற்றது; தன் வாழ்க்கைத் திட்டத்தை நோக்கமாகக் கொண்டு அதற்கான நிலையான கனாக்களையும், அவற்றின் நடைமுறையில் ஏற்படும் அனுபவங்களையும் குறித்தல் கட்டாயம் நலந்தரும்.