உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுபாசு சந்திர போசு

|| 85

அறிவதாகும். இந்தியாவின் பழம்பெருமை பேசுவதால் அடிமை மனப்பான்மை ஒழியாது. உண்மையில் அப்பெருமையை நம் புதுவாழ்வில் நிலை நாட்டாவிட்டால் பழமைப் பேச்சு அடிமைத்தனத்துக்கு ஒரு நற்சான்றாகவே ஆகிவிடும் என்பதைப் போஸ் நன்கு உணர்ந்தார். இதனாலேயே அவர் நாட்டுப் பற்று அவரைப் பிற நாடுகளின் சிறப்புக்களை ஊன்றிக் கவனிக்கத் தூண்டிற்று. தன் நாட்டின் சிறப்பே சிறப்பு என்ற கிணற்றுத் தவளை மனப்பான்மையை அவர்கொள்ள முடியவில்லை. பிறர் இந்தியாவைக் குறை கூறுவதைக் கண்டு அவர் சிங்கம் போல் சினந்தெழுந்ததுண்டு. ஆனால் குறையிருப்பதாக அவர் உணர்ந்தால் அப்போது சினங்கொள்வதற்கு மாறாக ஆத்திரங் கொண்டு சீர்திருத்தக் கோடரியின் மூலம் அதனைத் திருத்துவதில் ஈடுபடுவார்.

இந்தியாவின் அடிமைத்தனம் வெறும் அடிமைத் தனம் மட்டுமன்று. செயலற்று ஏலமாட்டாத்தனம், அறிவற்ற கண் மூடித்தனம், அடிமை மனப்பான்மையை மறைக்கும் தன்னல இறுமாப்பு, இச்சகப்பேச்சு, வாய் வேதாந்தம், அடிமை நீக்கும் முயற்சிக்கு மாறாக அடிமைகளிடையே அடிமையாதிக்கப் போட்டி வேட்டையாடுதல் ஆகிய எண்ணற்ற தீமைகள் தோய்ந்து கிடந்தன என்று அவர் கண்டார். இவையனைத்துக்கும் மருந்து எப்பற்றினுக்கும் மேலான நாட்டுப் பற்று; எச்செயலார்வத்துக்கும் மேலான நாட்டுப் பணியின் ஆர்வம் ஆகியவையேயென்று கண்டார். ஆகவே வேறு இனிய பசப்புக் குறிக்கோள்களால் மக்கள் ஒற்றுமையைச் சிதறடிக்காது நாட்டு விடுதலை ஒன்றை நோக்கியே யாவரையும் ஊக்கி வந்தார்.

ஒற்றுமைக்கு மறை திறவுகோல்

போஸ் நாட்டுக்குத் தந்த மற்றொரு விலை மதிக்க முடியாப் பரிசு ஒற்றுமைக்கு வழி காட்டியதாகும். நம் தேசத்தில் எத்தனையோ சமயத் தலைவர்கள் தோன்றியும் சாதிப் பூசல் ஒழிந்தபாடில்லை. எதிர்பாராத வகையில் சாதியுணர்ச்சி பெருகிக் கொண்டு தான் வருகிறது. எத்தனையோ அறிஞர்கள், நாட்டுத் தலைவர்கள் தோன்றியும் சமயவாதங்கள் அருகிவிடவில்லை; பெருகிடத்தான் செய்கின்றன. சாதி சமயங்களைப் பாராட்டாதவர்களாலும் சாதி சமய வேறுபாட்டை அகற்றவே