உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
86 ||

அப்பாத்துரையம் - 6



முடியவில்லை. அதைப் பாராட்டு பவர்களாலும் அழிக்கவே முடியாது.ஆனால் வாய் பேசாச் செயல் வீரரான போஸ் தோன்றுவித்த இயக்க மொன்றில் மட்டுமே தொடக்க முதல் இறுதி வரை இப்பேச்சுகளுக்கு இடமில்லாது போயிற்று.

சாதி சமயப் பூசல் மட்டுமோ? அவற்றின் புதுப் பதிப்பாகத் தற்கால அரசியல் உலகிலே தோன்றியிருக்கும் கட்சிப் பூசல்கள் கூட அவர் இயக்கத்தை அசைக்க முடியவில்லை. இவர் இயக்கதின் பின்னர் இந்தியாவில் பல சாதி, பல மொழி, பல சமய, பல கட்சிக் கொடிகள் ஒருங்கே ஒரே பணியிடையே பறக்க விடுவதைக் காண்கிறோம். 1947-இல் பம்பாயில் நடைபெற்ற கடற்படை வீரர் கிளர்ச்சியின் போது எல்லாக் கட்சிக் கொடிகளையும் ஆதரவாளர் தாங்கிச் சென்ற காட்சி பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சிக் கனவுகளுக்கு ஒரு பேரிடியாய் அமைந்தது. இந்தியாவின் மீதுள்ள அரசியல் பிடியைக் கைவிட்டுவிட அவர்கள் துணிந்ததற்கான காரணங்களிலே இது முதன்மையானது என்பதில் ஐயமில்லை.

கடவுளரை யொத்த மகான்களாலும் அறிஞர்களாலும் அரசியல் பெரியார்களாலும் சாதிக்க முடியாத இச்சாதனையின் மறை திறவுகோல் யாது? அது வேறு எதுவும் இல்லை. செயல் சுத்தமேயாகும்.

பலர் மனச் சுத்தமுடையவர்களாயிருக்கலாம். அநீதி கண்டவுடன் இஃது அநீதி என்றறிவதுடன் நிற்பர். வேறு சிலர் அதனை அநீதியென நிலைநாட்டி வாதிடுவதுடன் நிற்பர். போஸோ நினைத்ததைக் கூறுவார்; கூறியதைச் செய்வார்; பெருத்த அநீதிகளை நினைக்கு முன், பேசு முன், செயல் வீரராகி எதிர்ப்பார். பிறர் மனத்தில் அநீதி என்றுபட்டு, அதனை அவர்கள் வாய்விட்டுக் கூறி, வாதாடி நிலை நாட்டி செயல் சூழ்ச்சிகளால் அதனை அகற்றும் வரை அவர் பொறுத்திருப்பதில்லை. அவற்றைத் தாம் உணர்ந்ததே ஒழிப்பார்.

போஸ் ஒருவரே தனிப் பெருந்தலைவராயிருந்த 'விடுதலை இந்திய இயக்க'த்தில் மட்டுமே, ஒரு மொழியினர். ஒரு வகுப்பினர், ஒரு சயமத்தினர், ஒரு கட்சியினர்கூட ஆதிக்கம் வகித்தனர் என்றோ, உரிமை மறுக்கப்பட்டனர் என்றோ எவரும் கூற எண்ணுவதற்குக் கூட இடமில்லாதிருந்தது. இதுவே வேறு எந்த