4. இழந்த உயிர் திரும்புமா?
(1943 அக்டோபர் 25 ஆம் நாள் திங்கட் கிழமையன்று சிங்கப்பூரில் நடைபெற்ற அகில மலேயா இந்தியப் பணக்காரர் மகாநாட்டின் போது, நேதாஜி விடுத்த வேண்டுகோள் அல்ல, உத்தரவின் சுருக்கம்)
நண்பர்களே!
உங்கள் எல்லோரையும் மனமார வரவேற்கின்றேன். இந்தியச் சரித்திரத்திலேயே மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது இம் மகாநாடு. நீண்ட சொன்மாரி இந் நேரம் தேவையில்லை; ஆதலால் எனது வேண்டுகோள் இதுதான். நம் மகத்தான லட்சியத்தையடைய, இம் மகாநாடு உங்களைச் சோதிக்கப் போகிறது. இந்தியாவை விடுதலை செய்யும் மகத்தான பொறுப்பு உங்கள் ஒவ்வொருவர் மீதும் இப்பொழுது சுமத்தப்பட்டிருக்கிற தென்பதை நீங்கள் உணர்வீர்களென்றே நம்புகிறேன்.
போர்க்களம் செல்லுகின்ற இராணுவத்தில், சாதாரண சிப்பாய் முதல் அதிகாரி வரை எல்லோரும் தத்தம் பொறுப்பை சரி சமமாகப் பங்கிட்டுக் கொண்டு, சரிவரக் கடமையைச் செய்தால் தான் வெற்றி கிடைக்கும். கிழக்காசியாவிலுள்ள இந்தியர்கள் எல்லோருமே. இன்று ஒரே இராணுவ மயமாகி விட்டீர்கள். உங்களில் சிலர் பணக்காரர்கள்; சிலர் ஏழைகள்; சிலர் கவ்வி அறிவுடையவர்கள்; சிலர் அஃதில்லாதவர்கள்; என்பது எனக்குத் தெரியும். எத்தனை தான் வேற்றுமை யிருந்தாலும் இன்றுள்ள கடமையைப் பொறுத்தவரையில், எல்லோரும் சரிநிகர் சமானமானவர்களே. இந்தக் கடமையிலிருந்து யாரேனும் தப்பித்துக் கொள்ள முயற்சி செய்யலாகாதென்பதை உங்கள் மனதில் நன்றாகப் பதிய வைத்துக்கொள்ளவேண்டும்.