உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. விடுதலைப் பாறை

முடிசார்ந்த மன்னர், பிடிசாம்பராயினர்! இதுவே மன்னர் மரபின் பொது நீதி. இதற்கு விலக்கான தென்னாட்டு மன்னர் இருவர் உண்டு. 'பிடிசாம்பர்' வாழ்க்கைகளை ஒழுங்காய் எழுதிய 'தாள்வரலாறு’, அவர்கள் புகழ் பொறிப்பதில் தள்ளாடியதுண்டு. ஆனால், மக்கள் உள்ளமாகிய பொன் வரலாற்று ஏட்டில் இருவர் புகழும் நீடித்துள்ளன. புதுப்புது மேனியுடன் இருவர் புகழும் நீடித்து வளர்கின்றன.

தமிழகத்தின் தென் கோடியிலே, பாஞ்சாலங்குறிச்சியருகே ஒரு மண்மேடு காட்சியளிக்கிறது. அது தமிழர் கண்களில் ஒரு வீரகாவிய ஏடு. தமிழர் உள்ளங்களில் அது விடுதலைக்குக் கொடி எடுத்த வீரத்தின் காடு. வீரத்தின் எல்லை நோக்கி, விடுதலை ஆர்வம் என்ற கவண் பொறி ஏந்தி, வீரபாண்டியக் கட்டபொம்மன் வீசி எறிந்த புகழ்க் கல்லின் சுவடு அது! உடல் சாய்ந்தாலும் சாயாத ஒரு வீர உள்ளம் இன்றும் அவ்விடத்தில் நின்று வருங்காலம் நோக்கி வீறிட்டு முழக்கமிடுகிறது.

தென் கோடியின் இக்குரலுக்குத் தமிழகத்தின் வடகோடி எதிர்க்குரல் தருகிறது.சித்தூர் அருகே, நரசிங்கராயன்பேட்டைப் புறவெளியிலே, அது கன்னட மொழியிலே குரலெழுப்புகின்றது. அதுவே கன்னடத்தின் போர்வாள், ஹைதர் அலியின் வீர முழக்கம். அது தமிழகத்தின் உள்ளம் தடவி, ஆந்திரம் நோக்கி அடர்ந்தெழுகின்றது. கன்னடம் அதிர, மலையாளம் மலைப்பு எய்த, அது தென்னகத்தைத் தட்டி எழுப்புகிறது.

மன்னன் மரபில் வந்த குடிமன்னன் கட்டபொம்மன். ஆனால், அவன் மக்கள் தலைவனானான்; வெளியார் ஆதிக்கத்தை வீறுடன் எதிர்த்து நின்று விடுதலைக் கொடியேற்றினான்.இதற்கு மாறாக ஹைதரோ, குடிமரபிலே, பொதுமக்களிடையே