162 || |
அப்பாத்துரையம் - 6 ——————————————— |
பொதுமகனாகத் தோற்றியவன். அவன் வீரனானான். வீரத்தை நாடு அழைக்க. அவன் வீர மன்னனானான்; பேரரசு நாட்டினான். அது மட்டுமோ? அவன் மற்றப் பெரும் பேரரசுகளுடன் மோதிக்கொண்டான். ஆயினும், அவன் தன் பேரரசைக் காப்பதைவிட, மாநிலம் காப்பதிலேயே பெரிதும் மனங் கொண்டான்.
ஆளவந்த வெளியார்களை மீளவைக்க அவன் அரும்பாடு பட்டான். எனினும், ஆளத் தெரியாத கோழை மன்னர் பலர் வெளியார் வலுவால் வாழ எண்ணினர். பேரரசுகளோ சரிந்துவரும் தம் வலுவைச் சதி எதிர் சதிகளின் உதவியால் சப்பைக்கட்டுக் கட்ட எண்ணின. இன்னும் சிலர் பலர் வெளியாரை அண்டிப் பிழைப்பதையே ஆக்கமாகக் கொண்டனர். விடுதலைக்கான உயிர்ப் போராட்டத்தைக்கூட அவர்கள் தம் சிறுதனி நலத்துக்காகப் பயன்படுத்தி, அதில் குளிர்காய எண்ணினர்.
விடுதலைப் பூஞ்சோலையில் இவ்வாறாக வேற்றுமைப் புயலடிக்கத் தொடங்கிற்று; ஒற்றுமை சாயத் தலைப்பட்டது; சதியும் பூசலும் சதிராட முற்பட்டன. அஞ்சா நெஞ்சன் ஹைதர் இத்தனை சூழல்களையும் தன்னந்தனியனாய் நின்று மும்முர மாகத் தாக்கினான்; சாய்வைத் தடுக்க முயன்றான்; ஒற்றுமையைத் தானே படைத்து உருவாக்க விரைந்தான். அவ்வொற்றுமைப் பாறையின் முகட்டில் விடுதலைக் கொடியை உயர்த்திவிட அவன் விதிர் விதிர்த்தான்.
சாய்வை அவனால் நீண்டநாள் தடுத்து நிறுத்த முடியவில்லை. சாய்வு வலுத்தது. விடுதலைக் கொடியை அவனால் ஏற்ற முடியவில்லை. வேற்றுமைப் புயல் மேலும் கீழும் நாலாபுறமும் குமுறியடித்தது. ஆனால், புயலிடையே மின்னல் போல, அவன் சுழன்று போராடினான். அப்புயலின் வீச்சு எதிர்வீச்சுக்களையெல்லாம் சமாளித்து, அவன் விடுதலைக் கம்பத்தின் அடிப்படைக்கல் நாட்டினான்.
புயல் எளிதில் அமையவில்லை. ஆனால், புயலிடையே ஹைதர் நட்ட கல் அந்தப் புயலடியிலேயே அசையாத விடுதலைப் பாறையாய் நிலவிற்று.