உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
164 ||

அப்பாத்துரையம் - 6



அது சிவாஜியின் வீர மரபு விளங்கிய இடம் அது என்பதையும் அவர் மறக்கவில்லை. ஆனால், மராட்டியத்தில் காய்த்து முற்றி விளைவுற்ற கொடி, தமிழகத்திலே மலர்ந்தது என்பதையோ, கன்னடத்திலே மூல விதையூன்றியதென்பதையோ அவர் கனவிற்கூடக் காண முடியவில்லை. ஒருவேளை அக்காட்சியை அவர் மறக்க எண்ணியிருக்கலாம். சிவாஜியின் மரபுக்கும் நானாசாகிப்புக்கும் இடையேயுள்ள போலி மரபு பேஷ்வா மரபு. அது கன்னடத்தின் விடுதலைப் போராட்டத்திடையே கொண்ட பங்கை அவர் வீர வரலாற்றுக் கண் காண விரும்பியிருக்க முடியாது. அது அவர் விழுமிய மராட்டிய உள்ளத்தை உள்ளூர உறுத்தி இருக்கக்கூடும்!

மராட்டிய மண்டலத்தின் வேற்றுமைப் பிணக்கு, ஐதரா பாதை ஆண்ட நிஜாமின் கோழை அடிமைத்தனம், ஆர்க்காட்டு நவாபு மகமதலியின் குள்ள நயவஞ்சகச் சூழ்ச்சிகள், கிலிகொண்ட திருவாங்கூர் மன்னர் மரபின் ஆங்கில ஆதிக்க நேசம் - இத்தனை இருள்கள் சூழ்ந்த தென்னாட்டின் அந்நாளைய வாழ்விலே, வீறொளி பரப்பிய வீரசோதி, ஹைதர்! அவன் வாழ்க்கை வரலாறு தென்னாட்டவர் உள்ளங்களை, சிறப்பாக வீரம் கருக்கொள்ளும் நிலையில் உள்ள இளைஞர் உள்ளங்களை ஈர்க்கும் தன்மையுடையது. அது காலத்தின் செல்வம். காலந்தாண்டி ஞாலத்துக்கு வழிகாட்டும் சீரிய பண்பு அதற்கு உண்டு.

வரலாற்றில் மறைக்கப்பட்டிருந்த பொன்னேடு பாஞ்சாலங் குறிச்சி. ஆண்ட அயலார் அதைக் கற்பனைக் கண் கொண்டு பார்க்கவும் அஞ்சினர். 19-ஆம் நூற்றாண்டின் வாயிலில் அவர்களை எதிர்கொண்டழைத்த அந்நிகழ்ச்சியின் நிழலைக்கூட அவர்கள் வரலாற்றில் குறிக்கவில்லை. அதன் பின் 1857-இல் எழுந்த வீர ஏட்டையோ அவர்கள் திரித்துக் கூறி அமைந்தனர். ஆனால், ஹைதர் வாழ்வை அவர்கள் திரித்துக் கூறவில்லை; மறைக்கவில்லை. அதை அவர்கள் மறக்கவும் இல்லை. ஆயினும், அவர்கள் அதைத் தம் இனத்தவர்க்கு ஆளும் இனத்தவர்க்கு - - ஒருநிலையான எச்சரிக்கையாக மட்டுமே தீட்டினர். ஆளப்படும் மக்கள் கண்களில் அதன் மெய்யான உருவம் தென்படாமல் இருக்கும்படி, அவர்கள் அதற்குச் சாயமடித்து உருமாறாட்டம்