உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 213

பணிந்து நட்பாடினான். ஆயினும், திறை செலுத்துவதில் அவன் நாள் கடத்தி வந்தான். ஹைதர் சீற்றங்கொண்டு சாமூதிரியையும் அவன் அமைச்சனையும் அவரவர் அரண்மனைகளிலேயே சிறைப்படுத்தினான். அப்போதும் செயல் சாயவில்லை. ஹைதர் அமைச்சனை வதைத்துத் துன்புறுத்தினான். தனக்கும் இந்தத் தண்டனை தரப்படக்கூடும் என்று எண்ணி சாமூதிரி தன் அரண்மனைக்குத் தானே தீ வைத்து அதில் மாண்டான். நகரின் செல்வத்தைக் கொள்ளையிட்ட பின், ஹைதர் மலையாளக் கரையில் தெற்கு நோக்கி முன்னேறினான். கொச்சி அரசரும் பாலக்காட்டு அரசரும் பணிந்து பெருஞ் செல்வத்தைத் திறையாக அளித்தனர்.

சாமூதிரியின் நெஞ்சழுத்தத்தின் பயனை ஹைதர் விரைவில் கண்டான். நாடு முழுவதும் அடக்கிவிட்ட மகிழ்ச்சியுடன் அவன் கோயமுத்தூர் சென்றவுடனே, மலையாளக்கரை முழுவதும் காட்டுத் தீ போலக் கிளர்ந்தெழுந்தது. மாடக்கரையிலிருந்து ஹைதர் கிளர்ச்சியை அடக்கும்படி ரஸா சாகிப் என்ற படைத் தலைவனை அனுப்பினான்.

ஆனால், கிளர்ச்சி இத்தடவை படைவீரர் கிளர்ச்சியாயில்லை. நாயர்குடி மக்கள் அனைவருமே கிளர்ந்தெழுந்தனர். ரஸா சாகிபு முன்னும் செல்லமாட்டாமல், பின்னும் வரமாட்டாமல் திணறினான். ஹைதர் செய்தி அறியுமுன் நிலைமை படுமோசமாயிற்று. செய்தியறிந்த பின்னும் பெருவெள்ளத்தால் ஹைதர் முற்போக்குப் பெரிதும் தடைப்பட்டது. நாயகர் வீரர்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டு மைசூர்ப் படைகளுக்குப் பெருஞ்சேதம் விளைத்தனர். நகரை அணுக முடியாமல் இரு படைகளும் தடைபட்டு நின்றன. ஆனால், இச்சமயம் ஹைதரிடம் இருந்த பிரெஞ்சுப் படைப் பிரிவின் தலைவன் உருப்படியான உதவி செய்தான். அவன் உக்கிரமாக முன்னேறி அரண் வரிசைகளைப் பிளந்தான். பிளவின் வழி ஹைதர் படைகள் முன்னேறி நகரைக் கைக்கொண்டன.

நாடு கைவசமானபின் ஹைதர் வட்டியும் முதலுமாகப் பழி வாங்கினான். மலபார் மக்கள் என்றும் அவன் பெயரை மறக்க முடியாதபடி தன் ஆற்றலை அவன் அவர்கள்மீது பொறித்தான். அவன் இப்போது எடுத்த நடவடிக்கைகள் படைத் துறை வரலாறு