உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
216 ||

அப்பாத்துரையம் - 6



மேலும் ஹைதரின் தேசீயம் வெளிநாட்டாரை வெறுத்த தேசீயமன்று. பிரஞ்சுக்காரரின் வீரம், உறுதி, கட்டுப்பாடு ஆகியவற்றை ஹைதர் மனமாரப் பாராட்டினான். தன் அரசியலிலேயே அவர்களைப் பல துறையிலும் ஈடுபடுத்த அவன் தயங்கவில்லை. ஆங்கிலேயரிடமும் அவன் பெருமதிப்பு வைத்திருந்தான். அவர்கள் நட்பையே விரும்பினான். ஆகவே, அவன் தேசீயம் பிறநாட்டாரையோ பிறநாட்டுப் பண்பையோ வெறுத்த தேசீயமன்று. அவற்றைப் பயன்படுத்தியேனும் சரிந்துவந்த தேசீய வாழ்வைக் காக்க அவன் அரும்பாடுபட்டான். ஆனால், அவன் தேசீயத்துக்கு எதிராயிருந்தது வெளிநாட்டார் அரசியல் தலையீடும், அதற்கு ஆக்கமளிக்க உடந்தையாயிருந்த மற்றப் பேரரசுகளின் பண்புமேயாகும்.

இந்த நிலையில் ஹைதர் பேரரசுகளைக் கூடிய மட்டும் எதிர்க்காமலே மைசூரையும் மற்றத் தென்னக அரசுகளையும் வலுப்படுத்த முயன்றான். அவன் காலத்தில் எவரும் இந்தக் காலங் கடந்த உயரிய நோக்கத்தை உணர்ந்தார்களில்லை. ஆனால் அவன் உரையாடல்கள், கருத்துரைகளை வெளி நாட்டுத் தூதுவர் நமக்குத் தெரிவிக்கின்றனர். அவற்றில் இந்த நோக்கம் முளைப்பாகத் தென்படுகின்றது.

பெயரளவில் மைசூர் மன்னனாயிருந்த சிக்க கிருஷ்ணராஜன் 1767-ல் உயிர் நீத்தான். அவன் மகன் நஞ்சிராஜன் மன்னர் பெயருக்கு உரியவனானான். ஆனால், அச்சிறுவன் தன் ஆற்றலும் பொறுப்பும் அறியாது வீணாரவாரங்களில் இறங்கினான். அவனைத் திருத்த முயன்றும் முடியாது போகவே, ஹைதர் அவன் அரண்மனைச் செல்வங்களைப் பறித்து, அவனைச் சிறைப்படுத்தினான். மன்னர் பொறுப்பை மட்டுமன்றிப் பெயரையும் அவன் இதன்பின் வெளிப்படையாக மேற்கொண்டு நவாப் ஆனான்.

இச்செயல் மூலம் ஹைதர் மீண்டும் பேஷ்வா மாதவராவின் சீற்றத்துக்கு ஆளானான். பேஷ்வாவின் பெரும்படை மைசூரை நோக்கி முன்னேறிற்று. பேஷ்வாவுடன் நிஜாமும்படையெடுப்பில் சேர்ந்து கொள்வதாக ஒப்புக் கொண்டான். ஹைதர் ஆர்க்காட்டு நவாபின் தமையனான மகுபூஜ்கானைத் தூதராக அனுப்பிச் சந்தித்துப் பேச முயன்றான். பேஷ்வாவின் சீற்றம் மாறவில்லை.