உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

91

அன்னைக்கு அவரிடம் அளவிலாப் பற்று இருந்தது. ஐன்ஸ்டீன் எதிர்காலத்தைப் பற்றி வேறு எவரும் எவ்வகை நம்பிக்கையும் காட்டியதில்லை. ஆனால், அன்னையார்மட்டும், "ஆல்பெர்ட் வருங்காலத்தில் ஒரு பெரிய பேராசிரியர் ஆகப்போகிறான். இது உறுதி. வேண்டுமானால் பாருங்கள்!” என்று பெருமையுடன் கூறுவாராம்.

குழந்தைப் பண்புகள்

குழந்தைப் பருவத்தில் ஐன்ஸ்டீன் நலிந்த உடலும், முதிரா அறிவும் உடையராகவே அமைந்திருந்தார். பிற்காலப் புகழின் விதையையோ, பிற்கால அறிவின் தடத்தையோ இச்சமயம் அவர் வாழ்வில் யாரும் காணமுடியாது. எல்லாப் பிள்ளைகளும் பேசும் பருவத்தில் அவர் பேசப் பழகவில்லை. பேசப் பழகியபின்பும் அவர் பேசுவது அருமையாகவே இருந்தது. அத்துடன் மற்றப் பிள்ளை களைப்போல் அவர் என்றும் ஓடியாடுவதில்லை. விளையாடுவது மில்லை. அவர் ஒரே பொழுதுபோக்கு ஒதுங்கி வாய் மூடிப் பகற்கனவுகள் காண்பதேயாகும்.

இளமையில் அவர் சூலைநோய்க்கு ஆளாய் வருந்தினார். இது அவர் ஒதுங்கிய பழக்கங்களை இன்னும் மிகுதியாக்கிற்று.

குழந்தைகள் பொதுவாகவும், அந்நாளைய ஜெர்மன் குழந்தை கள் சிறப்பாகவும், போர்வீரராக விளையாட விரும்புவதுண்டு. போர்வீரர் போன்ற பொம்மைகளை வைத்து விளையாடுவதையும் அவர்கள் விரும்புவது இயல்பு. ஆனால், ஐன்ஸ்டீன் இத்திசையில் ஆர்வம் செலுத்தியதே கிடையாது. புதிய ஜெர்மனியின் படைகள் தெருவில் அணிவகுத்துச் செல்லும், சமயம், குழந்தைகள் மட்டு மல்லாமல், பெரியோர்களும் அந்த வீரக்காட்சியைக் கண்டு களிப்பதுண்டு. ஆனால், ஜன்ஸ்டீன் அக் காட்சியைக் காண விரும்பவில்லை. போர்வீரரின் வறுமை கண்டும், தண்டனைக்கு அவர்கள் அஞ்சி அஞ்சி அடங்குவது கண்டும் அவர் அவர்கள்மீது இரக்கம் கொண்டார். அவர்கள் வாழ்வின்மீது அவருக்கு வெறுப்பே ஏற்பட்டது.