இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அமுதும் தேனும்
50
இனியெனக்கிவ் வையகமே சிறையின் கூடம்;
எல்லாமே பாலைவனம்: நெருப்புக் கோட்டை:
கனியெனக்கு வேப்பங்காய். உமர்கை யாமின்
கவிதைகளும் எனக்கினிமேல் எட்டிக் காய்தான்.
இனியெதற்கு வீண்வாழ்க்கை? கண்ணே உன்னை
இழந்தபின்னர் எனக்கெதற்கு வசந்த காலம்?
உனையெனக்குத் தந்தவளே! ஊமைப் பூவே!
உன்னைப்போல் இறப்பதுதான் எனக்கும் இன்பம்!
எண்ணாத எண்ணமெலாம் எண்ணி எண்ணி
இருந்தேனே! இழந்தேனே உன்னை நானே!
அண்ணாந்து பார்க்கின்றேன். நீல வானில்
அழகுநிலா இருக்கிறது நீதான் இல்லை!
மண்ணாகி விட்டதடி வாழ்க்கை!" என்றே
மலைநிலத்தை முத்தமிட்டான். சாவைத் தொட்டான்.
கண்ணீரால் நதிசெய்தாள் மங்கை அங்கே!
கதையொன்று பாதியிலே முடிந்த திங்கே!