அமுதும் தேனும்
54
சிரிப்புக்கு முல்லையிடம் பரிசு பெற்றாய்.
தென்னையிடம் இளநீரைப் பரிசு பெற்றாய்;
திருக்குர்ரான் முழுவதையும் ஒப்புவித்துச்
சிறுவயதில் தந்தையிடம் பரிசு பெற்றாய்,
இருக்கின்ற பரிசையெலாம் நீயே பெற்றால்
எனக்கேதும் கிடைக்காதே பெண்ணே! என்றான்.
உருக்கியசெம் பொன்னெதற்கு? நானே என்னை
உங்கட்குப் பரிசாகத் தருவேன் என்றாள்.
மதிப்பதற்குத் தெரிந்தவளே! தீராஸ் என்பாள்
மணிவயிற்றில் பிறந்தவளே! மக்பீ என்னும்
புதுப்பெயராம் புனைபெயரில் சிறப்பு மிக்க
புத்தகங்கள் எழுதியுள்ள மாதே! காதல்
நதிப்படகே! "நாஸ்தலீக்" "சிகாஸ் தா " போன்ற
நல்லபல காவியங்கள் படைத்த பெண்ணே!
விதைப்பதற்கு வந்துள்ளோம் இங்கே என்றான்.
விதைமுளைத்தால் "கதைதெரிந்து" விடுமே என்றாள்.
தலைசிறந்த செம்பொன்னே "ருபாயி" என்னும்
சந்தத்தை மிகவிரும்பும் பெண்ணே! ஆற்றின்
அலையசையும் அழகைப்பார் என்றான். பார்த்தாள்.
அழகுமிகு மலர்களைப்பார் என்றான். பார்த்தாள்.
மலர்நடந்து செல்வதில்லை என்றான். பூத்த
மலர்மணந்தான் நடந்துசெல்லும் காற்றி லென்றாள்.
சிலர்நடந்து செல்வதில்லை என்று சொன்னான்.
சிலர்புகழே நடந்துசெல்லும் உலகில் என்றாள்.