57
கவிஞர் சுரதா
மன்னன்மகள் அதுகேட்டு வியந்தாள். காதல்
மயக்கமுள்ள கட்டழகன் அவளை நோக்கி,
உன்னுடைய நூலகத்தில் உள்ள நூற்கள்
ஒருலட்சம் இருக்குமென எண்ணு கின்றேன்.
என்னுடைய நூலகமே நீதான், காதல்
இலக்கியமெல் லாமெனக்கு நீதான் என்றான்.
ஒன்றுபட்டுக் காதலிக்கும் நேரம் தன்னில்
உதடுகளே இலக்கியமாய் மாறு மென்றாள்.
ஓவியமே! உன்தந்தை லாகூர் தன்னில்
ஓய்வெடுத்துக் கொள்வதற்கு வந்த போது,
பாவரங்க நிகழ்ச்சியினைத் தள்ளி வைத்துப்
பைங்கிளியே! அவரோடு நீயும் வந்தாய்.
ஆவலொடு நீஇருந்த இடத்தை நாடி
அன்றொருநாள் கொத்தனார் வேட மிட்டுக்
காவலரை ஏமாற்றி உள்ளே வந்துன்
கன்னத்தில் எத்தனையோ முத்த மிட்டேன்.
நாடாளும் உன்தந்தை ஆண்டொன் றுக்கு
நான்குலட்சம் பொன்தரநீ அதனைப் பெற்று
வீடேதும் இல்லார்க்கும், மெக்கா செல்ல
விரும்புகின்ற பயணிகட்கும், விதவை கட்கும்,
ஏடாயி ரங்கோடி தேடு வோர்க்கும்,
இலக்கியங்கள் படைப்போர்க்கும், அள்ளி அள்ளி
நாடோறும் வழங்குகின்றாய்; உனக்கு நானோ
நாள்தோறும் முத்தந்தான் வழங்கு கின்றேன்.