59
கவிஞர் சுரதா
எதுகொடுத்தால் எதுகிடைக்கும்; இப்போ தென்றான்.
இதழ்கொடுத்தால் இதழ்கிடைக்கும்; இதனை யன்றி
நிதிகொடுத்துக் கேட்டாலும், உங்கட் கிங்கே
நிச்சயமாய் விருந்தெதுவும் கிடைக்கா தென்றாள்.
மதுகிடைக்க வழியுண்டோ? என்றான். நாட்டில்
மதுவிலக்கு நடைமுறையில் இருப்பதாலே,
அதுகிடைக்க வழியில்லை; கிடைத்த போதும்
அதைக் கொடுக்க நான்விரும்ப வில்லை என்றாள்.
அடையாளச் சித்திரமே! உன்றன் தந்தை
அரசவையில் இசைவாணர் பாடு தற்குத்
தடைவிதித்தார். பிறந்தநாள் விழாவின் போது
தங்கத்தால், வெள்ளியினால் வேந்தர் தம்மை
எடைபோடும் வழக்கத்தை நிறுத்த லானார்.
எனினுமவர், இந்நாட்டுப் பெண்கள், அன்ன
நடைபோட எத்தடையும் விதிக்க வில்லை.
நானவரைப் பாராட்டு கின்றேன் என்றான்.
முதலிரவு முகவுரையைப் போன்ற தென்றாள்.
முடிவுரையே காதலுக்குக் கிடையா தென்றான்.
நதியிங்கே யாரென்றாள். நீதான் என்றான்.
நம்முலகம் தனியென்றாள். ஆமாம் என்றான்.
இதுவரையில் பசியடங்க வில்லை என்றாள்.
ஏந்திழையை இருகரத்தில் தழுவலானான்.
குதிரைப்பால் தனைநன்கு புளிக்க வைத்துக்
குடித்தவர்கள் மயங்குதல்போல் மயங்க லானார்.