அமுதும் தேனும்
6
நீர்தந்தாள். அழகியிடம் நெஞ்சம் தந்தான்.
நெஞ்சத்தை அவன்தரவே அவளும் தந்தாள்.
தேர்தந்த வீதியிலே போகும் பெண்ணே!
செங்கனிகள் தருவாயோ என்று கேட்டான்.
ஊர்தந்த தோட்டத்துக் கனியை நெஞ்சில்
உறவுகொண்டோர்க்கிலை என்றாசொல்வேன் என்றாள்
கார்தந்த கருங்கூந்தல் மங்கை மீது
கண்வைத்தான்; கான்சாகிப் கையை வைத்தான்.
குதிரையின்மேல் மாசாவைத் தூக்கி வைத்தான்.
குயில்மங்கை அன்னவனை அணைத்துக் கொண்டாள்.
புதுமயக்கம் வருகின்ற தென்று சொன்னான்.
புகழ்மயக்கம் வருவதுதான் ஆபத் தென்றாள்.
எதுவரைக்கும் நம்பயணம் என்று கேட்டாள்.
இருட்டுகின்ற நேரம்வரும் வரையில் என்றான்.
எதிர்வெயிலின் கோபத்தைப் பாராய் என்றான்.
ஏந்திழையாள் முந்தானைப் பந்தலிட்டாள்.
முத்து முத்தாய் சிரிப்பவளே! நிழலுக்காக
முந்தானைப் பந்தலிடும் பருவப் பெண்ணே!
புத்தியைநீ தீட்டென்று பெற்றோர் சொன்ன
போதனையைக் கேளாமல் ஒவ்வோர் நாளும்
கத்தியினை நான்தீட்டிக் கொண்டி ருந்த
காரணத்தால் வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டேன்.
வித்தையின்றி நித்திரையும் இன்றித் தையல்
வேலைசெய்து வெளியூரில் பிழைத்து வந்தேன்.