பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

பார்த்துவிட வேண்டும் என்ற பைத்தியக்கார எண்ணம் அவருக்குத் தோன்றியது. வள்ளல் வாழும் ஊருக்குச் சென்றார். அவர் தம் வீட்டில் தங்கியிருக்கும்போது பார்க்கக்கூடாது என்பது புலவர் கருத்து. அவர் எங்கேனும் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும் போது நடுவழியில் மறிக்க வேண்டும் என்று எண்ணியவராதலின், அதற்கு ஏற்ற காலத்தைப் பார்த்துக் கொண்டு, ஒருவர் வீட்டில் தங்கினார்.

ஒரு நாள் வல்லாளர் எங்கோ புறப்படப் போகிறார் என்ற செய்தி புலவருக்குக் கிடைத்தது. காஞ்சியில் இருந்த மன்னன் அந்தச் செல்வரை அழைத்திருந்தான். அரசாங்கத்தில் ஏதேனும் மாறுபாடோ, சிறப்பு நிகழ்ச்சியோ நேருமானல், நாட்டில் உள்ள செல்வர்களையும் அதிகாரிகளையும் அழைத்து யோசிப்பது அந்த மன்னன் இயல்பு. இப்போதும் ஏதோ ஒன்றைப்பற்றி ஆலோசனை செய்வதற்காகவே வல்லாளரை அழைத்தான் மன்னவன்.

அந்தக் காலத்தில் மன்னனிடமிருந்து அழைப்பு வருவதானால் அதைப் பெறற்கரும் சிறப்பாக எண்ணுவார்கள் மக்கள். மன்னவனுக்கு இருந்த பெருமை கிடக்கட்டும்; அவனால் மதிக்கப் பெறும் மனிதர்களுக்கு, அவனை அடிக்கடி பார்த்துப் பழகும் உரிமை உடையவர்களுக்கு, இருந்த செல்வாக்குக்கே எல்லை இல்லை.

வல்லாளர் அரசனைப் பார்க்கப் புறப்பட்டார். அரசவைக்குச் செல்வோர் நல்ல ஆடை அணிகளை அணிந்து செல்வார்கள். அவ்வாறே அவர் இடையில் சிறந்த துகிலையும், மேலே சரிகைக் கரையிட்ட மேலாடையையும் புனைந்தார். காதில் நல்ல வைரக் கடுக்கன்களை அணிந்துகொண்டார். நல்ல தலைப்பாகையையும் சிறந்த காலணியையும் அணிந்து புறப்பட்டார்.