42
அந்த முட்டாளுக்குத் தெரியாது. நான் கண்ணைப்போல் காத்து வருகிறேன். தாங்கள் வந்து பார்த்து எனக்கு ஆசி கூறவேண்டும்" என்றார் திருத்தங்கி.
'அதையும் பார்த்துவிடுவோம்’ என்று ஒளவையார் எழுந்தார். பின்புறத்துத் தோட்டத்துக்குத் தமிழ்ப்பாட்டியாரை அழைத்துச் சென்றார், உலோபியர் சிகாமணி. தோட்டத்தை ஒளவையாரும் பிறரும் பார்த்தார்கள். வாழை மரங்கள் நன்றாக வளர்ந்து குலை தள்ளிக் கண்னைப் பறிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்தன. மறுபடியும் கூடத்திலே வந்து அமர்ந்தார்கள்.
கூட்டத்திற் சிலர், 'அட படுபாவி! இத்தனை வாழைப் பழங்கள் மரத்திலே பழுத்திருக்கும்போது இந்தப் பிராட்டியாருக்குச் சில பழங்களைக் கொண்டு வந்து கொடுக்க மனம் வரவில்லையே!' என்று தமக்குள் அந்தச் செல்வரை வைதனர்.
திருத்தங்கி ஒளவையாரைப் பார்த்து மிகவும் பணிவோடு பேசத் தொடங்கினர். "இப்போது தாங்கள் பார்வையிட்ட வாழைத் தோட்டம் எவ்வளவு நன்றாக இருக்கிறது ஏதோ தாங்கள் நல்ல மனசு வைத்து இங்கே எழுந்தருளி என் வாழைத் தோட்டத்தையும் பார்த்தீர்கள். இது என் பாக்கியம். தாங்கள் இங்கே வந்தீர்கள், என் தோட்டத்தைப் பார்த்தீர்கள் என்று நாளைக்கு நான் யாரிடமாவது சொன்னால் நம்பமாட்டார்கள். நான் யாரையும் அழைப்பதில்லை; தோட்டத்தைக் காட்டுவதும் இல்லை. தாங்கள் இங்கே வந்ததற்கு ஓர். அடையாளம் வேண்டாவா? தங்கள் திருவாக்கால் அடியேனுக்கு ஆசி கூறி ஒரு பாட்டுப் பாடவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். அப்போது அவர் முகத்தில் அசடு வழிந்தது.
"ஆள் கெட்டிக்காரன் ஐயா! இவனுக்குப் பாட்டு வேறு வேண்டுமாம்!" என்று சிலர் ஆத்திரப்பட்டனர்.