67
உதவுவது தமிழுலகுக்கே புதுமையாக இருந்தது; இதை யாவரும் பாராட்டினார்கள். புலவர்களுக்கோ பலவகையில் நலம் உண்டாயிற்று. வாணராயர் ஊரில் இல்லாமல் இருந்தாலும் அவரை நாடிச் சென்ற புலவர்களுடைய விருப்பம் நிறைவேறியது.
பிறருக்குக் கொடுப்பதில் பல பல நுட்பமான முறைகள் உண்டு. குறிப்பறிந்து ஈதலும், புலவர் வந்து சென்ற பிறகு அவரை அறியாமல் பரிசுகளைத் தருவதும், அவர் ஒன்று கேட்டால் பன்மடங்கு வழங்குதலும் முதலிய பல வகையில் புரவலர்கள் தம் அன்பைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், புலவர்கள் நேரிலே தம் வேட்கையைச் சொல்வதற்கு நாணவேண்டிய அவசியம் இல்லாமல், நேரில் காண முடியாமல் போயிற்றே என்று. வருந்த இடம் இன்றி, வாணராயர் தம் வீட்டின் வாயிலில் கட்டியிருந்த ஒலையும் எழுத்தாணியும் செய்து விட்டன.
பிறரால் ஓர் உபகாரம் வேண்டுகிறவர்கள், அந்த உபகாரியிடம் பணிவாக இருந்து அதனைப் பெறுவது உலக இயல்பு. இங்கேயோ, எனக்கு இது வேண்டும் என்று கட்டளை விடுப்பதுபோலப் புலவர்கள் தம் கருத்தைத் தெரிவிக்கலாம். பரிசு பெற்ற பிறகு உபகாரியைக் கண்டு பேசி அளவளாவி விருந்து நுகர்ந்து தங்கலாம்.
வாணராயர் கவிஞர்கள் அனுப்பும் ஒலையைக் கண்டு வெளியே வந்து அவர்களை வரவேற்றார். வேண்டியதை வழங்கினார். பின்பு அவர்களுடைய தமிழ்க் கவி இன்பத்தை நுகர்ந்தார். பல புலவர்கள் தம்மைப்பற்றி எழுதிய ஓலைகள் அவர் வீட்டில் குவிந்தன. புலவர்களுடைய அன்புச் செல்வத்தை அவர் பெற்று வாழ்ந்தார்.