உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வருகிறான். சோறு கறிகள் இலையில் வரிசை வரிசையாக வட்டிக்கப்படுவது காணுகிறான். பசிகொண்ட நாய்கள் தாமே சோற்றண்டையில் சூழ்ந்தன. பசிகொண்ட மக்களோ பண்ணையார்கள் கையசைக்க வந்து சேர்ந்தனர்.

அனைவரும் உணவருந்துகிறார்கள், மண்ணாங்கட்டி அள்ளூறிப் போகிறான். மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. உண்ணும் மக்களைச் சுற்றிச் சுற்றி வருகிறான். விலாப்புடைக்க உண்டு எழுகிறார்கள் ஊர் மக்கள். அவர்கள் வாய் நிறைய வெற்றிலைப் பாக்கிட்டு மெல்லுகிறார்கள். அவர்கள் முகங்கள் பொலிவுறுகின்றன. முதுகெலும்பை ஒட்டிய வயிறு முற்புறம் பெருத்திருப்பதை மண்ணாங்கட்டி கடைக்கண்ணால் பார்த்துப் பார்த்துக் கடையுதட்டால் சிரிப்பை ஒழுக விடுகிறான். அனைவரும் ஏரி நோக்கிச் செல்லுகிறார்கள். வேலை தொடங்குகிறார்கள். மாலை வேளைச் சோறு சமைக்கத தொடங்குகிறார்கள் பண்ணையாட்கள. மண்ணாங்கட்டி தான் சாப்பிட மறந்துபோனதைத் தன் வயிற்றைத் தடவிய அவன் கைகள் காட்டுகின்றன.

மாலைப்போதில் மீண்டும் ஊர் விருந்து மண்ணாங்கட்டிக்கு உட்பட நடக்கிறது.

21