பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பன்னிரண்டு

மாலையில், மண்ணாங்கட்டி ஏரிக்கரையின் இடையில் நின்று வேலை நடப்பதைப் பார்க்கிறான். நாளை வேலை தீர்ந்துவிடும் நிலையில் இருப்பது, அவனுக்குத் தெரிகிறது. ஊர் மக்கள் ஏரிக்கரையைக் கட்டுவதில் சுறுசுறுப்பாக வேலைசெய்வதைப் பார்க்கிறான். அவன் விழிகள் நினைப்பில் தோய்கின்றன. பகலவனும் மேற்கில் மறைகிறான். ஊரில் நுழைகிறான்.

பெரிய பண்ணையார் வீட்டு மாடியில் பொருத்தப்பட்டிருக்கும் மணிப்பொறியின் முட்கள் இரவு 9 என்று காட்டுகின்றன. மண்ணாங்கட்டி அப்பெரு வீட்டை ஒரு சுற்றுச் சுற்றிவருகிறான். மேலும் அவன் அவ்வீட்டின் பக்கவாட்டில் நின்று வீட்டின் உயரத்தைக் கண்ணால் அளக்கிறான்.

அப்பெரு வீட்டின் மாடியில், ஒரு கூடம். அங்குச் சாப்பாட்டு மேசை, நாற்காலிகள். அலமாரி, ஒருபுறம் இரண்டு கட்டில்கள், விளக்கொளியில் காட்சியளிக்கின்றன. பெரிய பண்ணையார் அங்கு வந்து மேசையின் எதிரில் உட்காருகிறார். ஆட்கள், சாப்பாட்டுக்குரிய கறிகள் முதலியவைகள் கொண்டுவந்து வைத்துப் போகிறார்கள். பெரிய பண்ணையாரின் அழகு மனைவி வருகிறாள். அவள் இரண்டு பேருக்கு உணவு படைக்கிறாள். அலமாரியைத் திறக்கிறாள். சாராயச் சீசாவை எடுத்துக் கணவன் எதிரில் உள்ள ஏனத்தில் ஊற்றுகிறாள். அவன் குடிக்கிறான். மேலும்

22