பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேந்தன் புலவோர்க்கு விருந்துசெய் காதை 145


மறுத்தே உண்மையை மறைக்கா துரையென,
அம்பி காபதி அஞ்சா தறைவான்:

190 வேந்தே வணக்கம்! விருந்துண வினையான்
மாந்தும் போதென் அன்னையின் மாண்பு
நினைவு வரவே நெடிது புகழ்ந்தேன்.
அன்னையின் அன்பை அவண்பாடுங் காலை
என்னை மறித்திட் டெந்தை தொடர்ந்தார்

195 இதற்கியான் யாது செய்வேன் என்ன,
எதற்கும் ஏற்ற இறைதர முயல்கிறாய்
தந்தையுன் பாடலைத் தடுக்கா திருப்பின்
எந்த வகையில் இதைமுடிப் பாயென
வேந்தன் வினவ,விடுப்பான் அம்பி:

200 அமரா வதியெற் கமுது படைக்கையில்
அமர நோக்கியென் அன்னையைப் போல
உணவு படைக்கிறாய் என்றியான் உரைக்கப்
பாடல் தொடுத்தேன் பாடவோ முழுப்பா?
இதோ!
"இட்டடி நோக எடுத்தடி கொப்புளிக்க

205 வட்டில் சுமந்து மருங்கசைய - அட்ட
அறுசுவையூண் நல்கிடுமென் அன்னைக் கடுத்துன்
நறுசுவையூண் பெற்றிடுவேன் நான்."
என்பது முழுப்பா; இதன்பொருள் அறிவீர்
என்ன குற்றம் இதிலுள தென்ன,

210 மன்னன் மயங்கி மாற்றங் கூறான்.
அம்பியின் பாடல் அப்பா வயிற்றில்
இன்பால் வார்க்கப் பெருமூச் செறிந்தார்.


193. அவண் - அவ்விடம். 194. மறித்தல் - குறுக்கிட்டுத் தடுத்தல்; எந்தை - எம் தந்தை. 196. இறை - பதில். 199. விடுப்பான் - பதில் கூறுவான். 200. ஏற்கு - எனக்கு. 201. அமைதியாக. 205. அட்ட - சமைத்த. 206. அன்னைக் கடுத்துன்- அன்னைக்கு அடுத்து உன், 207.நறுசுவை - நன்மணச்சுவை. 210.மாற்றம் - மறுபதில். 211.அப்பா - தந்தை கம்பர்.

அ--10