பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பிகாபதி கடவுள் பாடல் பாடிய காதை

181

நல்லவிச் செய்தி நவிலுஞ் சான்று;
ஆகவே என்பா அகப்பொருள் இலாதது.
சாகவே என்னிடம் செய்யும் சழக்கு
கொடுமை யானது; கூர்த்த மதியினீர்

180 நடுவு நிலையொடு நவில்வீர் தீர்ப்பென
அம்பி வேண்ட, அரசன் கூறுவான்:
வெம்பி யின்னும் வேண்டுதல் வேண்டா.
விரைந்து முடிக்கும் வேணவா உந்த
வரைந்தெண் குறிக்க மறந்தனை நீயே.

185 ஒருபொய் மறைக்க ஒன்பது பொய்யா?
ஒருதலை கொலையொறுப் புனக்குக் கொடுத்தது;
தீர்ப்பு வேறில முடிந்த தீர்ப்பிது;
ஆர்ப்பரித் தழுவதால் ஆவதொன் றில்லை
என்று கூற, கம்பர் இறைஞ்சி,

190 கொலையொறுப் பென்பது கொடிய தீர்ப்பு;
இலையென் மகன்பால் எந்தக் குற்றமும்;
இருப்பினும் அவனை எனக்காப் பொறுத்து
வெறுப்பிலா தனுப்புக என்று வேண்ட,
கற்பழிக்க முயன்ற காமக் குந்றமோ

195 வெற்பினும் பெரியது வெறுப்புக் குரியது;
எனவே என்னை ஏய்க்கச் சிறிதும்
கனவுகா ணா தீர்கண்டிப் பேயிது
என்ற மன்னனை எதிர்த்திலர் கம்பர்.
மன்றம் அமர்ந்த மாபெரும் புலவராம்

200 ஒட்டக் கூத்தர் வேந்தற் குரைப்பார்:
மட்டிலாப் புகழுடை மன்ன ரேறே!
அம்பி காபதி அருந்தமிழ்ப் புலவன்
நம்பலாம் அவனால் நற்றமிழ் வளர்வதை;


178. சழக்கு-கீழான தன்மை. 183. வேணவா - பேராசை; உந்த-செலுத்த. 184. வரைந்து எண் குறிக்க - எழுதி எண் குறிப்பிட. 186. ஒருதலை - உறுதி. 192. எனக்கா - எனக்காக. 195. வெற்பினும்- மலையினும். 199. மன்றம் - அரச சபை. 301. ஏறே - ஆண் சிங்கமே.