பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலர் பாராட்டுக் காதை

87

 

இணையாய்க் கையை இறுகப் பிடிப்பேன்;
80கன்னி யொருத்தியின் கையைத் தொடுதல்
உன்னின் தெரியும் உகந்த தன்றென;
என்னைப் பொறுக்க என்றவன் இயம்ப,

(அமராவதி)


அமராவதிதான் அயர்ந்து கூறுவாள்:
அன்றென் கையை அறிஞராம் நீவிர்
85நன்றாய்ப் பற்ற முயல நானதைத்
தடுத்ததை யெண்ணித் தயங்குகின் றீரோ?
அடுத்தது போக; அடுத்தது காண்பம்.
கன்னியா யிருக்குங் காலை ஆடவர்
என்னைத் தொடுதல் ஏற்ற தன்றென

90நாண வுணர்வொடு நடந்துகொண் டேனியான்
காண வந்த காதல ராமுமைப்
புண்படச் செய்ததைப் பொறுத்தருள் கென்று
பண்பட வேண்டினள் பத்தினிப் பாவை.

(அம்பிகாபதி)


அன்றுநீ மறுத்ததை அகத்தில் எண்ணி
95இன்றுயான் வருந்துவல் என்று வருந்திநீ
ஆறுதல் எனக்கே அளிக்க எண்ணியிம்
மாறுதல் செய்து மகிழச் செய்கிறாய்.
உண்மையில் ஆடவர் உன்னைத் தீண்டலைத்
திண்மையாய் வெறுப்பதைத் தெரிந்துகொண் டேனியான்;

100எனவே எட்டி யிருப்பதே நன்றென
நினைவில் கொண்டேன் நீயெனைப் பொறுக்கென,


81. உன்னின் - நினைத்துப் பார்த்தால்; உகந்தது - விரும்பத்தக்கது 87. அடுத்தது - நடந்துபோனது; அடுத்தது - அடுத்து நடக்க விருப்பது.