பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்போலோ - 14

113

இளி, அம்புலிக் கூண்டினால் அவர்கட்கு ஒரு பயனும் இல்லை. அஃது அவர்கட்கு ஒரு சுமையேயாகும். ஆகவே, அதனைத் தாய்க்கப்பலினின்றும் கழற்றிவிட்டனர். அண்டாரிஸின் எடை, 10,000 - இராத்தல்கள் (கிட்டத்தட்ட 4,464 கிலோ கிராம்). அஃது அம்புலியை நோக்கி {மணிக்கு 3,700 மைல்) மணிக்கு 5,920 கிலோ மீட்டர் வீதம் விரைந்தது; விரைவில் அம்புலியில் விழுந்து நொறுங்கியது. அஃது அப்போலோ-14 இறங்கின இடத்திலிருந்து (32 மைல்) 51 கி.மீ. தொலைவிலும் அப்போலோ-12 இறங்கின இடத்தி லிருந்து (78 மைல்) 125 கி.மீ. தொலைவிலும் உள்ள ஓர் இடத்தை நோக்கிக் குறிவைத்துக் கழற்றிவிடப் பெற்றது. அண்டாரிஸ் அம்புலியில் விழுந்த இடத்தில் அது (65 லிருந்து 75 அடி) 19-5. லிருந்து 22-5 மீட்டர் நீளமும், (7 அடி) 2-1 மீட்டர் அகலமும், (3 அடி) 90 செ. மீ. ஆழமும் உள்ள ஓர் அகழியைத் தோண்டியது. அப்போலோ 12ஆம் 14 ஆம் அமைத்த நில அதிர்ச்சி மானிகள் (Seismograph) அது விழுந்ததால் நேரிட்ட அதிர்ச்சியைப் பதிவுசெய்து காட்டின.

இனி, அப்போலோ-14 என்ற தாய்க்கப்பல் அம்புலியின் சுற்று வழியிலிருந்து விடுபட்டு (2,50,000 மைல்)4,00,000 கி.மீ. பயணம் செய்து பூமியை வந்தடைய வேண்டும். திரும்பும் பயணத்தில் யாதொரு சீர்கேடுமின்றி அப்போலோ-14 தென் அமெரிக்க சாமோவாவிற்கு 1,406 கி.மீ. தெற்கில் பசிபிக் மாகடலில் வந்திறங்கியது. விண்வெளிக் கலம் இறங்கியபொழுது வானம் மப்பின்றித் தெளிவாகவே இருந்தது. மீட்புக் கப்பலொன்று அவர்களை ஏற்றுக் கொண்டது. ஹெலிகாப்டர் ஒன்று அவர்களை ஏற்றிக் கொண்டு சென்று நியூ ஆர்லியன்ஸில் ஒரு குவாரண்டைன் வண்டியில் தனிமையாக இருக்க ஏற்பாடு செய்தது. மீண்டும் ஒரு ஹெலிகாப்டரில் ஏறி மறு நாள் ஹூஸ்டன் அருகிலுள்ள விண்வெளி மைய இடத்திற்கு வந்து சேர்ந்தனர். பிப்ரவரி 26ஆம் தேதி வரை ஆய்வகத்தில் குவாரண்டைனில் இருந்தனர். அவர்களுடன் வந்த கற்களும் சோதனைக்கு உட்படுத்தப் பெற்றன.

அ-8