பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

135

அம்புலிப் பயணம்

"அமெரிக்கா“ என்ற தாய்க் கலத்தில் நிலவினை வலம் வந்துகொண்டிருந்த இவான்ஸ் மற்ற மூன்று கருவி களையும் கையாண்டு ஆய்வுகள் நடத்தினார். இவர் பணிப் பகுதியில் உள்ள இந்த மூன்று ஆய்வுக்கருவிகளையும் ஒளிப்படக் கருவிகளையும் இயக்கி வைத்தார். ஒரு கருவி அம்புலித் தரைக்கு 13 கிலோ மீட்டர் ஆழத்திலுள்ள நிலைமைகளை "ராடார் அலைகள்“ கொண்டு ஆராயும் தன்மையது. மற்ருெரு கருவி அம்புலியின் இருண்ட மறுபக்கத்தின் அமைப்பினை உற்றறிவதற்காக அங்குள்ள மேற்பரப்பின் வெப்ப நிலை இடத்துக்கு இடம் வேறுபடுவதைக் கண்டறிய வல்லது. இன்னொரு ஆய்வுக்கருவி விண்வெளிக்கலம் வெளியிடும் புகை முதலிய வாயுக்கள் எப்படி எப்படிப் பரவுகின்றன ? அவை அம்புலியின் அருகே எவ்வளவு நேரம் தங்கியிருக்கின்றன ? என்பவற்றைத் தெரிவிக்கும்.

இந்த நீண்ட பயணத்தில் விண்வெளி வீரர்கள் மூவரும் திட்டமிட்டபடி எல்லாச் சோதனைகளையும் வெற்றிகரமாக முடித்தனர். இந்தப் பயணத்தின் புதுமைகளில் ஒன்று நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள் அம்புலித் தரையில் கண்ட ஆரஞ்சு நிறப் பள்ளத்தாக்கு ஆகும். இங்குள்ள மண்ணை இருவரும் சேகரித்தனர். இத்தகைய மண்ணை எவரும் கண்டதில்லை. அம்புலியில் தோன்றும் எரிமலையினால் வெளிப்படும் குழம்பில் உலோகப் பொருள்கள் இருக்க வேண்டும் என்று கருதப்பெறுகின்றது. அப் பொருள்கள் உயிரியத்துடன் (Oxygen) சேர்ந்து இந்த ஆரஞ்சு நிற மண் (Rust) உண்டாகியிருக்கவேண்டும். என்று ஊகம் செய்கின்றனர். இஃது உண்மையாயின் அம்புலியில் நீரும் உயிரியமும் இருந்திருக்கவேண்டும் என்றும், இதிலிருந்து அம்புலிக் கடல்களில் 300 கோடி ஆண்டுகட்கு முன்னர் எரிமலைக் குழம்பு நிரம்பியிருந்த பொழுது அஃது உயிரற்றுப் போய்விடவில்லை என்பது தெரிகின்றது என்றும் கருதுகின்றனர்.