பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்போலோ - 8

47

அடைகின்றார்.[1] இவரும் நாற்பது வயதையுடையவர். இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பே இவ்வீரர் விண்வெளியில் கழித்துள்ள நேரம் மற்ற எல்லோரும் கழித்த நேரத்தைவிட மிக அதிகமானது (18 நாள்). அங்ஙனமே, உலக வரலாற்றிலேயே வேறு எவரும் பயணம் செய்திராத அளவிற்கு இவர் 73 இலட்சம் மைல் பயணம் செய்துள்ளார். அப்போலோ-8 பயணத்தையும் கணக்கில் சேர்த்தால் மேற் குறிப்பிட்ட எண்ணிக்கை விவரங்கள் மேலும் அதிகமாகும்.

அப்போலோ - 8 பயணத்தில் பங்குகொண்ட மூன்றாவது வீரர் வில்லியம் எ. ஆண்டர்ஸ் என்பார். முப்பத்தாறு வயதை எட்டிய இவர் 1968லேயே விண்வெளி வீரருக்குரிய தகுதியை அடைந்த போதிலும், இந்தப் பயணமே அவரது முதற் பயணமாகும். ஏற்கெனவே விண்வெளிப் பயண அநுபவம் பெற்ற முப்பத்து மூவருடன்[2] இவர் முப்பத்து நான்காவது மனிதராகச் சேர்ந்து கொள்கின்றார்.

இந்த பயணத்தின் பொழுது இந்த மூன்று வீரர்களும் கிட்டத்தட்ட (595,000 மைல்) 952,000 கிலோ மீட்டர் பயணம் செய்து அம்புலியை வலம் வந்ததுடன் அதற்கு மிக அருகில்-112 கி. மீட்டர் தொலைவில்-இருந்தனர். அம்புலியின் பல்வேறு பகுதிகளையும் ஒளிப் படங்களாக எடுத்தனர். தொலைக்காட்சிக் காமிராவையும் இயக்கிப் பூவுலகிலுள்ளோர் அம்புலிக் காட்சிகளை உடனுக்குடன் அவரவர் இல்லங்களிலிருந்து கொண்டே காணும்படி செய்தனர். இவர்கள் கொண்டுவந்த ஒளிப் படங்களும் மிகத் துல்லியமாக அளக்கப் பெற்ற விண்வெளி எடுகோள்களும் சந்திர மண்டலத்திலுள்ள எரிமலை வாய்களின் (Craters) உயரம், வடிவம், அளவு முதலியவற்றையும் அம் மண்டலத்தைப்பற்றிய வேறு தகவல்களையும் ஆராய்ந்து அறிவதற்குப் பேருதவியாக இருக்கும். மேலும், அறிவியலறிஞர்கள் இவற்றை ஆராய்ந்து அம்புலியின் இயல்பு, அதன் தோற்றம் முதலியவற்றையும் கணித்தல் இயலும்.


  1. கர்னல் போர்மனுடன் ஜெமினி - ? லும், நான்கு நாள் ஜெமினி - 13 பயணத்திலும் சென்றவர் இவர்.
  2. அமெரிக்கர் 21 பேர்; இரஷ்யர் பன்னிருவர்.