பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்போலோ - 8

51

அம்புலியின் கவர்ச்சி ஆற்றலின் இழுப்பால் விண்கலத்தின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. கலம் பூமியினின்றும் கிளம்பிய 69 மணி நேரத்திற்குப் பிறகு கலத்திலுள்ள ஒரு பொறியை இயக்கி மணிக்கு 9,334 கி. மீட்டராக இருந்த வேகம் 5,944 கி. மீட்டராகத் தணிக்கப்பெற்றது. நான்கு நிமிடம் இயங்கினதில் இப்பொறி 16,000 இராத்தல் எரி பொருளை எரித்துத் தீர்த்தது. இதனால் விண்கலம் 111 கி. மீட்டரிலிருந்து 310 கி.மீ. வரையுள்ள நீள் வட்டப் பாதையில் இயங்கத் தொடங்கியது. அப்பொழுது விண்கலம் அம்புலியின் மறுபுறத்தில் இருந்தது. அப்போது வானெலித் தொடர்பும் தொலைக்காட்சித் தொடர்பும் அறுபட்டதால் பூமியிலுள்ளோர் சில நிமிட நேரம் கவலையுடன் கழித்தனர். அம்புலியின் மறுபுறத்திலிருந்து விண்கலம் நேர்ப்புறத்திற்கு வருங்கால் அது நீள்வட்டப் பாதையில் இருந்தது. பின்னர் கலத்திலுள்ள முக்கிய பொறியைப் பதினோரு விநாடிகள் இயக்கிக் கலத்தைக் கிட்டத்தட்ட ஒரு வட்டச் சுற்று வழியில் செலுத்தினர் விண்வெளி வீரர்கள். விண்கலம் மூன்றாவது முறையாக அம்புலியின் மறுபுறம் வருங்கால் இச் செயல் நிகழ்ந்தது. இதற்குள் கிட்டத்தட்ட நாலரை மணிநேரம் கழிந்துவிட்டது.

இப்பொழுது விண்கலம் கிட்டத்தட்ட 96-3 கி. மீட்டரிலிருந்து 97.2 கி.மீ. வரை உள்ள தொலைவில் ஒரு வட்டப் பாதையில் சுற்றி வரத் தொடங்கிற்று. ஒருமுறை சுற்றுவதற்கு ஆன நேரம் சுமார் இரண்டு மணி. விண்கலம் மணிக்கு (3,700 மைல்) 5,920 கி.மீ. வீதம் அம்புலியைச் சுற்றி வந்து கொண்டிருந்தது. இங்ஙணம் பத்துத் தடவைகள் அது சந்திரனை வலம் வந்தது. இந்நிலையில் விண்வெளி வீரர்கள் பல்வேறு சோதனைகளைச் சுறுசுறுப்பாக நடத்தினர். இப்போது பயணத் தலைவர் போர்மனின் இதயம் நிமிடத்திற்கு 78-80 ஆகத் துடித்தது. சில நிமிட நேரமே இந்நிலை நீடித்தது. பூமிக்கும் 4,00,000 கி.மீட்டர் தொலைவிலுள்ள அம்புலிக்கும் செய்தித் தொடர்பு மிகத் தெளிவாக இருந்தது. ஆண்டர்ஸின் குரல் தெளிவாகவும் அமைதியாகவும் கேட்டது;