பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சி 3

டெல்லுடைய வீட்டுக்கு முன்புறம் பள்ளத்தாக்கு. குடியான வர்களின் பெருங் கூட்டம். பெரிய வால்டர் இரு கரங்களில் இரண்டு பேரப்பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு, மெல்ச்தல், ஸ்டா பாச்சருடன் முன்னணிக்கு வருகிறார். குழந்தைகள் பலர், 'வாழ்க டெல்லின் நாமம், வாழ்க வாழ்கவே!' என்று பாடிக்கொண் டிருக்கின்றனர். டெல் வீ ட்டுப் பக்கத்திலிருந்து நடந்து வந்ததும், முன்னால் நின்ற பலர் ஒவ்வொருவ ராக அவனைக் கட்டித் தழுவுகின்றனர்.


எல்லோரும் : வில்லாளன் வாழ்க! வில்லியம் டெல் வாழ்க! வாழ்க, வாழ்க!

(ருடென்ஸும் பெர்தாவும் வருகிறார்கள்: வந்ததும் ஹெட்விக்கைப் பாராட்டிவிட்டு, மற்றக் குடியானவர்களையும் பாராட்டுகின்றனர்.)

பெர்தா: தாய்நாட்டைக் காத்த வீரர்களே! தோழர்களே! யாவருக்கும் என் வணக்கம்! செல்வச் சீமாட்டியாயிருந்த என்னையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்! என் உள்ளம் எப்போதும் உங்களுடனேயே இருந்தது என்பதை ஆண்டவரும் நீங்களும் அறிவீர்கள்! என்னைக் காத்து,_நம் அருமைத் தாயகத்தையும் விடுதலை செய்ததில் இதோ அருகில் இருக்கும் நண்பரும் பெரும் பங்கு எடுத்துக் கொண்டார்!

(ருடென்ஸைச் சுட்டிக் காட்டுகிறாள். ஜனங்களின் கரகோஷம்.)

இந்த வீரருக்கே என்னை அர்ப்பணம் செய்கிறேன்! என் உடைமைகளெல்லாம் இனி இவருடையவை! சுதந்திரக் கனவானுக்குச் சுதந்திர நாட்டில் நான் மாலையிடுவதில் நீங்களும் மகிழ்வீர்கள்!

(கரகோஷம்.)

ருடென்ஸ்: எண்ணத் தொலையாத என் இனிய பொழில்களிலும், நெடிய வயல்களிலும், வேலை செய்யும் என் குடியானவ மக்கள் அனைவரும் இனிச் சுதந்திரர்கள். சுதந்திரமாகப் பயிர் செய்து வாழும்படி யாவற்றையும் இப்போதே வழங்குகின்றேன்!

குழந்தைகள்: வாழ்க டெல்லின் நாமம், வாழ்க, வாழ்கவே! வீழ்க கொடுமையெல்லாம், வீழ்க, வீழ்கவே!