பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மொழிக்கலப்பை வலிந்து புகுத்துகின்ற போக்குக் காணப்படுகின்றது. இத்தகைய போக்குகளாலும், வணிகத் தொடர்பு உள்ளிட்ட காரணங்களால் பிற மொழியாளர்களுடன் உறவாட வேண்டிய நிலையிலும் பிறமொழிச் சொற்களின் கலப்பு, நம் தாய்மொழியாம் தமிழ் மொழியில் நேர்ந்து விட்டது. காலங்காலமாகப் பேசப்பட்டு வந்தமையால் அப்பிறமொழிச் சொற்களும் தமிழ்ச்சொற்கள்போல் தோன்றுவதால் அவையும் தமிழ்மொழிச் சொற்களே என்று கற்றாரும் கல்லாதாரும் மயங்கி இயங்குகின்றனர். இங்ஙனம் பிறமொழிச் சொற்களைக் கலப்பதால் அச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்களின் வழக்காறுகள் மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுத் தமிழின் சொல்வளம் குன்றிப் போகும். அங்ஙனம் குன்றிப்போனால் மொழி வளர்ச்சியில் செழுமை மங்கிப்போகும். அவ்வாறு மங்குவதைத் தவிர்ப்பதே மொழி வளர்ச்சியில் முதன்மைக் கூறாகும். அந்த உண்மையை உணர்ந்த தமிழக அரசு தமிழில் கலந்துள்ள அயற்சொற்களைக் கண்டறிந்து அவற்றை அகரவரிசைப்படுத்தி அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களைக்கூறும் அயற்சொல் அகராதியை உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில் தோன்றியதே அயற்சொல் அகராதி என்னும் இத்திட்டமாகும். தமிழில் அகராதிகளைத் தொகுப்பதற்கென்றே உருவாக்கப்பட்டுச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் இத்திட்டத்தைச் செயற்படுத்திட சட்டமன்ற அறிவிப்பாக அறிவிக்கப்பட்ட திட்டம் நிறைவெய்தி இன்று நூலாக உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்நூலில் உள்ள தூயதமிழ்ச் சொற்கள் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும். இனிவரும் தலைமுறை மக்கள் பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து தூயதமிழ்ச் சொற்களையே பயன்படுத்துவார்கள். எனவே, காலத்திற்கேற்ற சொற்கருவூலமாக வெளியிடப் பெற்றுள்ள இந்நூலை உருவாக்கிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்களின் தலைமையிலான இயக்கக் குழுவினருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்த்துகளுடன் (தங்கம் தென்னரசு.)