உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56 / அயோத்திதாசர் சிந்தனைகள்


போதிக்க வந்தவர் என்றும் சுயராஜ்ஜியம் என்னும் தெய்வக் கட்டளையையும் அதற்கு இடையூருள்ளதை விலக்கவேண்டியது என்றும் போதித்தேன் என்றும் கூறியவர், மறுபடியும் அதற்கு மாறாக ஆங்கிலேயர் இந்தியாவை வந்து கைப்பற்றியதுமுதல் குடிகளுக்கு, யாதாமொரு திருப்த்தியும் கிடையாது என்றும் இந்துதேசத்தை மோசத்தால் அபகரித்துக்கொண்டார்கள் என்றும், கவர்னர் ஜெனரல்கள் யாவரும் பொய்சொல்லி ஏமாற்றிவிட்டுப் போய்விடுகிறார்கள் என்றும், மகா அக்கிரமமாக ஆயுதங்களுக்கு சட்டங்களை ஏற்படுத்தி ஆயுதங்களை உபயோகிக்கக்கூடாது செய்துவிட்டார்கள் என்றும், வரிகள் என்று பெயர்வைத்து சீவ ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள் என்றும், நீதியின்றி பெரியோர்களைத் தண்டித்தார்கள் என்றும் ஆர்மேனிய நாட்டில் நடந்தக் கொடுமைகள் யாவையும் இங்கு நடத்தினார்கள் என்றும் பலவகையான இராஜ நிந்தனை செய்திருக்கின்றார்.

இவர் எதார்த்த சன்னியாசியும் முத்திக்குப் பாடுபடுவோருமாய் இருப்பாராயின் இத்தகைய வீண் விரோத நிந்தைகளை வீணில் பெருக்க மாட்டார். உலகத்தை மாயையென்று கூறும் சன்னியாசிக்கு ஆங்கிலேய ராஜ்ஜியம் என்றும் சுயராஜ்ஜியம் என்றும் பேதமுண்டாமோ.

வீணே சன்னியாசி என வேஷமிட்டு குடிகள் யாவரையும் இராஜாங்கத்தோர் முன் இழுத்துவிட்டு அங்குமிங்கும் அல்லல்பட்டு குடிகளுடன் தானும் கெட்டு தவிக்கின்றார்.

தன்னை சீர்திருத்திக்கொள்ளத் தெரியாது தேசத்தை சீர்திருத்துவோம் என்று வெளிவருவது சித்த சபலமேயாம். பிரிட்டிஷ் ராஜாங்க சீர்திருத்தமோ என்னில் அன்னிய ராஜாங்கத்தார் இந்தியாவின் மீது படையெடுத்து தேசத்தையும் குடிகளையும் பாழ்படுத்தாமல் காப்பாற்றிவருகின்றார்கள்.

வரிகொடாவிடில் சித்திரவதை செய்யாமல் உண்டானப் பொருளால் வசூல்செய்துவருகிறார்கள்.

உடன்கட்டை என்னும் புருஷனுடன் பெண்ணையும் போட்டு துள்ளத் துடிக்கக் கொளுத்துத் துன்பத்தை துலைத்து வருகின்றார்கள். சிசுவத்தி என்னும் குழந்தைகளைப் பெற்றுக் கொல்லும் கள்ளவிபச்சாரிகளை அடக்கி வருகின்றார்கள். ஒருவருக்கொருவர் செய்துக்கொள்ளுஞ் சண்டைகளையும் ஒருகிராமத்திற்கும் மற்றொரு கிராமத்திற்கும் உண்டாகிவருஞ் சண்டைகளையும் விசாரித்து விரோதங்களை அடக்கி ஆண்டு வருகின்றார்கள்.

ஒருசாதியோருக்கும் மற்றொரு சாதியோருக்கும் உள்ள சண்டைகளையும் ஒருமதத்தோருக்கும் மற்றொரு மதத்தோருக்கும் உள்ள சண்டைகளையும் விலக்கி நீதிசெலுத்தி வருகின்றார்கள்.

இத்தகைய உட் சீர்திருத்தங்களில் இன்னும் எத்தனையோ சாதிக்கேட்டின் பிரிவினை கலகங்களும் மதக்கேட்டின் பிரிவினை கலகங்களும் இருக்க அவைகளை அடக்கி ஒற்றுமெய் அடையத் தெரியாதவர்கள் சுயராட்சியம் பெருவார்களாயின் இராட்சியபாரத்தை எவ்வகையில் தாங்குவரோ விளங்கவில்லை.

- 2:6; சூலை 22, 1908 -

சுயராட்சியம் கருசுருப்பில் வேண்டும் என்ற விவேகம் மிகுத்தவரும் கல்வி உடைத்தவருமான கனம் தில்லாக்கென்னும் கனவான் காங்கிரஸ் கமிட்டியின் மிதவாதிகள் பட்டபாடுகள் யாவையும் பாழாக்கி அமிதவாதியெனத் தோன்றி அவசரத்தில் செய்த செய்கைகள் யாவும் அவமானத்திற்கு உள்ளாக்கி விட்டது.

சிலர் நமது தேசத்திற்குப் பாடுபடுங் கனவான்களில் தில்லாக்கென்னும் கனவானே முக்கியமானவர் என்று முழுப்பிரிதியில் பேசிவருகின்றார்கள். அவர் வாசஞ்செய்த தேசத்துக் குடிகளுக்கு எத்தகைய இடுக்கங்கள் உண்டாயிருந்தன அவற்றுள் எத்தகைய இடுக்கங்களை நீக்கி ஆதரித்து இருக்கின்றார். அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகளை பறையர் பறையர்