92 / அயோத்திதாசர் சிந்தனைகள்
ஆதலின் ஐரோப்பாகண்டத்தினின்று இவ்விடம் வந்து கிறிஸ்துவின் மார்க்கத்தைப்பரவச் செய்ய ஆரம்பித்த பாதர்மார்கள் ஒவ்வொருவரும் அடியில் குறித்துள்ள அரியவாக்கியத்தை அன்புகூர்ந்து பாருங்கள்,
மத்தேயு 20-ம் அதிகாரம், 29-ம் வசனம் : “கிறீஸ்துவானவர் தனது மாணாக்கர்களையும், அவ்விடம் வந்துள்ள மக்களையும் நோக்கி என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ அவன் அதற்கு நூறத்தனையான பலனை அடைந்து நித்தியசீவனையும் பெறுவானென்று திட்டமாகக் கூறியிருக்கின்றார்” இத்தகைய சத்தியவாக்கியத்தை சாதிக் கிறீஸ்தவர்களுக்குத் தாங்கள் போதித்தும், அவர்களே வாசித்துக் கொண்டும் மேற்கூறியுள்ள சகல பாக்கியங்களை விட்டாலும் விடுவோம் சாதியை மட்டிலும் விடமாட்டோம் என்பார்களாயின், கிறீஸ்துவுக்கும் அவர் போதகங்களுக்கும் பொருந்துமோ. நித்தியசீவனாம் மோட்சபாக்கியம் அடைவார்களோ, ஒருக்காலும் அடையார்கள். ஆதலின் பிரோட்டிஸ்டான்ட் மார்க்கப்பாதர்கள் ஒவ்வொருவர்களும் அவற்றை சீர் தூக்கி இந்து தேசப்பழயக் கிறிஸ்தவர்களைப் பறைக் கிறீஸ்தவர்கள் என்று தாழ்த்திப் பாழ்படுத்தாமல் அவர்கள் விருத்தியில் அன்புகூர்ந்து முன்போல் கல்வி விருத்திச் செய்து பாதிரிகள் உத்தியோகங்களும், உபதேசிகள் உத்தியோகங்களும், உபாத்திமார்கள் உத்தியோகங்களையும் அளித்து நீதியின் பாதையில் விடுத்து நித்தியசீவனுக்கு ஆளாக்குவதுடன் சாதிக்கிறீஸ்தவர்களின் போர்வைகளையும் அகற்றிவிடச் செய்து அவர்களுக்கும் சுத்தயிதயம் உண்டாக்கி தேவனை தரிசிக்கச்செய்யுங்கள். பிராமணமதத்தர் ஏற்படுத்திக் கொண்ட சாதிப் போர்வையை முக்கால் பாகமும், சிறீஸ்தவனெனும் போர்வை கால்பாகமும் அணைத்துக்கொண்டு நான் - கிறீஸ்து, அவன்-எனுமொழிக்கு அவன் கிறீஸ்தவனாகான், நான் கிறீஸ்தவனென்னும் மொழியும், பொய்ம்மொழியாகி கற்பனைக்கு மாறுபட்டுக் கவலைக்குள்ளாக்கிவிடும். பெரும்பாலும் இவற்றை பாதர்கள் கவனிக்கவேண்டுமென்று எமது விண்ணப்பத்தை முடிக்கின்றோம்.
“கிறீஸ்தவன் எனுஞ்சிறந்தமொழியானது
அவன் கிறீஸ்து எனும் பொருளைத்தரும்”
அதாவது - கிறிஸ்துவின் நடையுடை பாவனை ஒழுக்கங்களைப் பின்பற்றியவன் எவனோ அவனே கிறீஸ்து அவனாவானென்பதாம்.
- 2:33; சனவரி 27, 1909 -
31. சென்னை கத்தோலிக்குக் கிறீஸ்தவர்களும் புதுவை கத்தோலிக்குக் கிறீஸ்தவர்களும்
சென்னையிலுள்ள ஓர் கத்தோலிக்குக் கிறீஸ்தவர்கள் ஆலையத்தில் பிரேதத்தை அடக்கம் செய்ய சில கிறிஸ்தவர்கள் குருவானவர் உத்திரவைப் பெறாமல் சென்றதாகவும், அதைக்கண்ட கபடற்ற குருவானவர் கையமர்த்தி நிறுத்தும்படி செய்ததாகவும், அக்கிறிஸ்த்தவர்கள் குருவின் முகத்தில் குத்தி உதிரம் வடியச் செய்ததுமன்றி மற்றுமுள்ளோர் தடியாலும், குடையாலும் அடித்துவிட்டு பிரேதத்தையும் அடக்கஞ்செய்து, குருவின்பேரில் பிரையாதும் செய்துவிட்டதாகவும் விசாரிணை நடந்துவருவதாகவும் கேழ்வியுற்று மிக்க விசனிக்கின்றோம்.
அதுபோல் புதுவையிலுள்ள ஓர் கத்தோலிக்கு கிறீஸ்தவர்கள் ஆலையத்தில் சாதிபேதமற்ற தமிழ் கிறிஸ்தவர்கள் வழக்கம்போல் அவ்வாலயத்திற்குச் சென்று பூசைக்காணுங்கால் அக்கோவிலுக்கு நூதனமாக வந்துள்ள குருவானவர் சாதிபேதமற்றத் தமிழ்க்கிறிஸ்தவர்களை நோக்கி நீங்களெல்லோரும் தாழ்ந்த சாதியார், உயர்ந்த சாதி கிறீஸ்தவர்களுடன் உழ்க்காரலாகா என்றாராம்.