பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 163

அரண்மனை உத்தியோகஸ்தருக்குள் தக்க பாலியர்களை தேர்ந்தெடுத்து வாலன்டியர்கார்ட் ஏற்படுத்தி, அவர்களுக்குக் கொடுக்குந் துப்பாக்கி முதலிய ஆயுதங்களையும் தாங்கள் உத்தியோகஞ்செய்யும் அந்தந்த துரைமக்கள் வீட்டிலேயே வைக்கும்படிச் செய்து (பிரேட்) பழகுவதற்குப் போகுங்கால் கொண்டுபோய் மறுபடியும் கொண்டுவந்து துரைமக்க ளடைக்கலத்தில் வைத்துவிட்டு அவ்வீட்டிற்குப் பாதுகாப்புள்ளவனாகவுஞ் செய்துவரல் வேண்டும். தாங்கள் சீர்மெய்க்குப் போகுங்கால் வாலன்டியரில் சேர்ந்துள்ளவன் விருத்தாப்பிய காலவுதவிக்காய் சொற்பப் பொருளுதவி செய்துவிட்டுப் போவதுடன் அவன் உத்தியோகஞ் செய்யக் கூடிய சுகதேகியாயிருக்குமளவும் துரைகள் உத்தியோகத்தில் மாறாமலிருக்குப்படியான கருணை செய்துவர வேண்டியது. அதாவது அவன் வாலன்டியர்கார்டைச்சார்ந்தவனாதலின், அவனது உடுப்பும், ஆயுதங்களும் துரைமக்கள் வசமிருக்கவேண்டியதாதலின் தாங்கள் சீர்மெய்க்குப்போகுங்கால் இருக்கும் மற்ற துரைமக்களிடம் அமர்த்திவிட்டுப் போவது சுகமாகும். அரண்மனை உத்தியோகத்தில் இவர்கள் சம்பளத்திற்குத் தக்கவாறு சொற்பதொகை பிடித்து (நன் காஸ்ட் டிரவீடியன் வாலன்டியர் பென்ஷன் பண்டிற்கு) சேர்த்துவிடுவதுடன் ஒவ்வோர் துரைமக்களும் அந்த பென்ஷன் பண்டிற்கு உதவிபுரிந்து வரும்படியான ஏற்பாடு செய்துவிடுவது உசிதமாகும்.

தங்கள் விருத்தாப்பிய காலத்தில் (பென்ஷன்) இருக்கின்றதென்று தெரிந்துக்கொள்ளுவார்களானால் அரண்மனை உத்தியோகத்தில் அதிக ஜாக்கிரதையில் உழைப்பதுமன்றி தற்காலம் உள்ள அன்பிலும் விசுவாசத்திலும் மிகுந்து மேலான நன்றியறிதலுள்ளவர்களாய் இருப்பார்கள்.

இவ்வகையான ஓர் ஏற்பாட்டை நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோர் தாமதத்தில் ஆலோசித்த போதிலும் மற்றுமுள்ள துரைமக்களும், லேடிமார்களும் சீர்தூக்கி ஆலோசித்துக் கூடிய சீக்கிரத்தில் அரண்மனை உத்தியோகஸ்தர்களுக்குள் (நன் காஸ்ட்டிரவீடியன் வாலன்டியர் கார்டாம்) துரைமக்கள் வீடுகளைப் பாதுகாக்கும் பட்டாளம் ஏற்படுத்துவார்களென்று எதிர்பார்க்கின்றோம்.

- 3:6; சூலை 21, 1909 -



65. கனந்தங்கிய பாபு சுரேந்திரநாத் பானர்ஜியும் சுதேசீயமும்

கனந்தங்கிய பாபு சுரேந்திரநாத் பானர்ஜியவர்கள் இந்தியர்களுக்கு சுதேசியங் கொடுப்பதால் பிரிட்டிஷ் அதிபர்களுக்கு சுகமுண்டாகுமேயன்றி கெடுதி நேரிடாதென்று கூறுகின்றாராம்.

நமது பானர்ஜியவர்கள் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கமும், சகலகலாவல்லவரென்றுஞ் சொல்லுதற்கு யாதோர் ஆட்சேபனையுமன்று.

இத்தகைய விவேகமிகுத்த வல்லவராயினும் இந்தியர்களின் சாதிவூழற் சண்டைகளையும், சமயபுறட்டு மாறல்களையும் தேறக் கண்டறிந்தவரென்று சொல்லுவதற்கு ஆதாரமில்லை.

இவ்விரு கட்சியின் பிரிவுகளில் சாதியால் தங்களை உயர்த்திக்கொண்டு ஏமாற்றி சீவிப்பவர்களும் சமயங்களினால் தங்கள்சாமி உயர்ந்ததென்றே மாற்றி சீவிப்பவர்களுமே பெருங்கூட்டத்தோராகும்.

இப்பெரும்போர் மிகுத்தோர்களில் வங்காளிகள் வசம் சுயராட்சியமளித்தால் பாரசீகர்களுக்கு மனத்தாங்கலுண்டாகும். பாரசீகர்கள் வசம் சுயராட்சியம் அளித்தால் மகம்மதியர்களுக்கு மனத்தாங்கலுண்டாகும். மகம்மதியர்கள் வசம் சுயராட்சியமளித்தால் மராஷ்டர்களுக்கு மனத் தாங்கலுண்டாகும் மராஷ்டர்கள் வசம் சுயராட்சியமளித்தால் கன்னடர்களுக்கு மனத்தாங்க லுண்டாகும். கன்னடர்கள் வசம் சுயராட்சியமளித்தால் திராவிடர்களுக்கு மனத்தாங்கலுண்டாகும்.

இத்தகைய மனத்தாங்கலால் ஒருவருக்கொருவர் போர்மிகுந்துவிடுமாயின் பிரிட்டிஷார்களே அப்போரை வந்தடக்கவேண்டியதாகும்.