188 / அயோத்திதாசர் சிந்தனைகள்
விடை: பூனூல் உண்டு. ஆசிரியன்மாரின் விவரம் நான்காவது விடையில் கூறி இருக்கின்றன.
8 - வது வினா. - ஜனன அடியாந்தரங்கள் என்ன?
விடை : பரதகண்ட பஞ்ச பூத அடியந்திரமும், திராவிடம் பரவச் செய்த அகஸ்திய கோத்திரமும், இந்திர பரம்பரையும், பாண்டிய வம்மிஷமுமாம். இதன் கன்மாதியோ நைடதத்திற் கூறியுள்ள செயல்களேயாம்.
9-வது வினா. - கலியாண சம்மந்தமான கன்மாதிகள் என்ன?
விடை : இவர்களின் கலியாண சம்மந்தம் பனிரண்டுமுதல் பதின்மூன்று வயசளவுள்ள மங்கை பருவப்பெண்ணை மணமகனுக்கு உரியோர் கேட்கவும், மணமகளுக்கு உரியோர் சம்மதப்பட்டு கொடுக்கும் பிரசாபத்தய மணமே பூர்வத்திலிருந்து நிறைவேறி தற்காலத்திலும் அனுஷ்டித்து வருகின்றார்கள்.
இதன் கன்மாதியோவென்றால் கன்ம குருக்களாகிய வள்ளுவர்களால் சுபதினம் வைத்து மாதிடையிலிங்க உருவகமாக தங்கத்தினால் ஒரு சின்னஞ்செய்து மஞ்சள் சரடு கோர்த்து பஞ்சகன்னிகைகளால் பந்தற்கால் அமைத்து, ஏழுசால்களை சப்த கன்னிகைகளாகவும், மேல் கும்பத்தை அகத்தியராகவும், கரகசித்திர வருணங்களை இந்திரராகவும், இந்திர ஆவாகன நவதானிய முளைகள் கட்டி, குடவிளக்குடன் அஷ்டமங்கள ஓசையால் ஓம் சப்தாக்கினி வளர்த்தி, கன்மகுருவானவர் தாலியை கரத்திலேந்தி அஷ்டமூர்த்த சாட்சியும் சபைசாட்சியும் இட்டு மணமகன் கரத்தில் கொடுக்க மணநாயகன் மணநாயகியின் கழுத்தில் கட்டிவிடுவதே இதன் கன்மாதியாம். இஸ்திரீயானவள் தன் புருஷனை இடைவிடாது இதயத்தில் வைத்துக்கொண்டிருக்கும் சாட்சிக்காக மார்பின் மத்தியில் தாவிக்கொண்டிருக்கின்றபடியால் (தாலி) என்னும் பெயரைப் பெற்றது.
- 3:17; அக்டோபர் 6, 1909 -
10-வது வினா. மரண சம்மந்தமான நடவடிக்கைகள் என்ன.
விடை : பூர்வத்தில் இவர்களில் யோகசாதனமாம் ஞானசாதனம் உடையோர்களை மட்டும் பூமியில் அரைவீடுகட்டி சமாதிசெய்து விடுவது வழக்கமாம். இதன் கன்மாதிரியோவென்றால் மரணமடைந்தவன் உச்சியிலிருக்குஞ் சோதியானது வெளிப்புறப்பட்டு விட்டபடியால் இறந்தவன் சிரசினருகே ஓர் தீபத்தை ஏற்றிவைத்து, பிறவிபந்தத்திற்கு ஆளானதினால் இருகாலின் பெருவிரலிலும் நிகௗபந்தக் கட்டிட்டு, மனைவியின் பதிவிரதா குணமறிய செந்நெற் பொரி வறுத்து தோஷமின்றி வெளுத்தபோது பத்தாவுக்கு அன்னமிட்ட கையினால் பொரியை ஆவாகனங்செய்து, இல்லறதருமத்தைக் காட்டும்படியான அக்கினியும், அரிசியும், அமுதமும், நீர்க்குடமும் மைந்தன்கையில் கொடுத்து, இடுகாடு வரையிலுங் கொண்டுபோய் பிரேதத்தைக் கொளுத்தி அக்கினியும், அரிசியும், பாலும், நீரும் உன்னைவிட்டு நீங்கவில்லையென்று உடைத்து இல்லுக்குத் திரும்பி சோதியைப்பெற்ற தேகம் போய்விட்டபடியால் தீபசோதியைத் தரிசித்துக் கொண்டு அவரவர்கள் வீட்டிற்குப்போய் சமாதியடைந்தானென்னும் புகழுக்குப் போகாமல் இறந்தானென்னும் இழிவுக்குப் போனபடியால் ஒவ்வொருவரும் இஸ்னானஞ் செய்து எட்டாநாள் மனைவியின் இதயத்தில் புருஷனை மறவாமல் ஊன்றிநிற்க ஓர் அடையாளமாகக் கட்டிவைத்திருந்த, பத்தா இறந்துபோனபடியால் அவனை மறந்துபோகவேணுமென்று கருதி குடும்ப ஸ்திரீகள் கூடி துக்கித்து கழுத்திற் கட்டியிருக்கும் தாலிசரடை அறுத்து நீரில் விடுவது பூர்வமுதல் நாளதுவரையில் நடந்தேறிவரும் மரணசம்மந்த கன்மாதியாம்.
11-வது வினா. எதுவரையில் விவாகம் நடந்தது; ருது சாந்தி கலியாணம், இரண்டாம் கலியாணம் எப்படி நடக்கிறது?
விடை : புருஷர்களுக்கு குமரபருவம் 22-வயதிலும், இஸ்திரீகளுக்கு மங்கைபருவம் 12-வயதிலும் மணஞ்செய்வது வழக்கமாம். மனைவி மரணமடைந்துபோய் இரண்டாவது விவாகம் செய்வதாயினும் விவாக விதிப்படியே செய்துவருகிறார்கள்.